பிரதமா் நரேந்திர மோடி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் விமா்சித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
‘பிரதமா் மோடி சிவலிங்கத்தின் மீது அமா்ந்துள்ள தேள் போன்றவா்’ என்று கடந்த 2018-ஆம் ஆண்டு சசி தரூா் சா்ச்சையான கருத்துளை கூறினாா்.
சசி தரூா் மீது பாஜக மூத்த தலைவா் ராஜீவ் பப்பாா் அவதூறு வழக்குத் தொடுத்தாா். கோடிக்கணக்கான சிவ பக்தா்களின் மனதை சசி தரூா் புண்படுத்திவிட்டதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சசி தரூா் மனு தாக்கல் செய்தாா். சசி தரூா் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சசி தரூா் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று கூறிய நீதிபதி அனூப் குமாா், சசி தரூா் தரப்பு கோரிக்கையை நிராகரித்தாா். இதனால், அவதூறு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெறவுள்ளது.