ஆந்திரத்தில் பெண்ணுக்கு வந்த பார்சலில் ஆணின் சடலம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் நாகதுளசி என்ற பெண், வீடு கட்டுவதற்காக நிதி கோரி, க்ஷத்திரிய சேவை சமிதியில் விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து, துளசிக்கு கட்டுமானப் பொருள்களை வழங்கி க்ஷத்திரிய சேவை சமிதி உதவியது. தொடர்ந்து, மின்சார உபகரணங்களை வழங்குமாறும் துளசி கோரிக்கை விடுத்தார். அவருக்கு க்ஷத்திரிய சேவை சமிதி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மின்விளக்குகள், மின்விசிறி, சுவிட்சுகள் போன்ற பொருள்கள் வழங்கப்படும் என்று துளசிக்கு வாட்ஸ்அப்பில் தகவலும் கிடைத்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை (டிச. 19) இரவில் மின்சார உபகரணங்கள் இருப்பதாகக் கூறி, ஒரு பெட்டியை துளசியிடம் ஒருவர் வழங்கிவிட்டு சென்றுள்ளார். பின்னர், பெட்டியைத் திறந்து துளசி பார்த்தபோது, அதில் ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், சடலத்துடன் ஒரு கொலை மிரட்டல் கடிதமும் இருந்தது. கடிதத்தில் ரூ. 1.3 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: காங்கிரஸ் 2029-க்குள் அழிந்து விடும்: ஹரியாணா முதல்வர்
இந்த சம்பவம் தொடர்பாக, காவல் நிலையத்தில் துளசி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, க்ஷத்திரிய சேவை சமிதியின் பிரதிநிதிகள், ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர், 4 முதல் 5 நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கும் சுமார் 45 வயதுடையவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், சுற்றியுள்ள காவல் நிலையங்களின் எல்லைக்குள், ஆள்கள் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட புகார்களையும் சரிபார்த்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.