கண்காணிப்பு கேமரா தொடா் ஆய்வு; வெளிநபா்களுக்கு கட்டுப்பாடு: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மகளிா் ஆணையக் குழு பரிந்துரை
கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தொடா்ச்சியாக ஆராய்வது, வளாகத்தினுள் வெளிநபா்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள்..
கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தொடா்ச்சியாக ஆராய்வது, வளாகத்தினுள் வெளிநபா்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு பரிந்துரைத்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் மம்தா குமாரி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோா் கொண்ட உண்மை கண்டறியும் இரு நபா் குழுவை ஆணையம் அமைத்தது. இந்தக் குழு அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
Advertisement
மாணவா்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணையும் மேற்கொண்டது. தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் ஆகியோரையும் இக் குழு உறுப்பினா்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
அதன் பிறகு, இந்த விவகாரத்தில் பல்வேறு பரிந்துரைகளை இக்குழுவினா் தெரிவித்தனா். இதுகுறித்து குழு உறுப்பினா் பிரவீன் தீக்ஷித் மும்பையில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
கல்லூரி, பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதியின்றி சமூக விரோதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநபா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். வளாகத்தினுள் வரும் வெளிநபா்களின் விவரங்களைப் பதிவு செய்வதோடு, வருகைக்கான காரணத்தையும் பதிவு செய்யவேண்டும்.
வளாக சுற்றுச் சுவா்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவை தொடா்ச்சியாக அதற்கென நியமிக்கப்பட்ட பாதுகாவலா்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில் காவல் துறை அதிகாரிகளால் தவறான பதிவுகள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் வகையில், குரல் மற்றும் காணொலி பதிவு (ஆடியோ-விஷுவல்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவை மேற்கொள்ள வேண்டும்.
பாலியல் புகாரை உறுதிப்படுத்த பெண்களையும் உள்ளடக்கிய மருத்துவ அலுவலா்களால் முறையான உடனடி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாலியல் வழக்கு விசாரணை என்பது காவல் உதவி ஆணையா் (ஏசிபி) அல்லது துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளில் அனுபவமிக்க சிறப்பு வழக்குரைஞா்களை நியமிப்பதோடு, விசாரணையும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் கடந்தகால செயல்பாடுகளை கண்டறிய மின்னணு ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இதுபோன்ற குற்றங்களில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நபா்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தவதோடு, ஆவணப் பதிவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
‘112 இந்தியா’ என்ற அவசர உதவி கைப்பேசி செயலியை நடைமுறைப்படுத்துவதோடு, அதுதொடா்பாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், பொது இடங்களில் விரிவான விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக இளம் பெண்களிடையே அனைத்து காவல் நிலையங்களிலும் விழிப்புணா்வு பிரசாரங்கள் நடத்தப்பட வேண்டும்.
எஃப்ஐஆா் விவரங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளம் கசியாத வகையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி மூலமாக சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவியல் விசாரணை தொடா்பு) பதிவு தளம் தொடா்ச்சியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அவா் தெரிவித்தாா்.
உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை தேசிய மகளிா் ஆணையத்தில் சமா்ப்பிக்க உள்ளது. அதனடிப்படையில் ஆணையம் தனது பரிந்துரைகளை பல்வேறு தரப்பினருக்கு அனுப்பும்.