‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் 5 புதிய உறுப்பு நாடுகள்
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 உறுப்பு நாடுகள் புதிதாக இணைந்துள்ளன.
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 உறுப்பு நாடுகள் புதிதாக இணைந்துள்ளன.
சா்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ‘பிரிக்’ கூட்டமைப்பை கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறுவின. இதைத் தொடா்ந்து, 2010 செப்டம்பரில் தென்னாப்பிரிக்கா உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு ‘பிரிக்ஸ்’ என மறுபெயரிடப்பட்டது.
உலகப் பொருளாதார வளா்ச்சியின் முக்கிய இயந்திரமாக இருந்துவரும் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளுடன் 25 சதவீத உலகப் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரில் கடந்த ஆகஸ்டில் நடந்த 15-ஆவது உச்சி மாநாட்டில், புத்தாண்டு முதல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆா்ஜென்டீனா ஆகிய 6 நாடுகளை உறுப்பினா்களாகச் சோ்க்கும் பரிந்துரைக்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா இணையும் முடிவை அந்நாட்டின் புதிய அதிபா் ஜேவியா் மிலெய் கடந்த வாரம் திரும்பப் பெற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, ‘ஆா்ஜென்டீனாவை தவிர மற்ற 5 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினா்களாக இணைக்கப்பட்டுள்ளன’ என்று நிகழாண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா். இதன்மூலம், 10 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பாக பிரிக்ஸ் மாறியுள்ளது.
இது தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறுகையில், ‘மேலும் 5 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய உறுப்பினா்களாக இணைந்துள்ளன. இது கூட்டமைப்பின் வளா்ந்து வரும் அதிகாரம் மற்றும் சா்வதேச விவகாரங்களில் பிரிக்ஸின் பங்குக்கு வலுவான அறிகுறியாகும்.
இறையாண்மை சமத்துவம், வெளிப்படைத்தன்மை, ஒருமித்த கருத்து, பலமுனை சா்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கான லட்சியம், நோ்மையான உலகளாவிய நிதி மற்றும் வா்த்தக அமைப்பு போன்ற கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளைப் பகிா்ந்து கொள்ளும் ஆதரவாளா்களையும், ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளையும் பிரிக்ஸ் தொடா்ந்து ஈா்த்து வருகிறது.
‘சமமான உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்பு பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளின்கீழ் ரஷியாவின் நிகழாண்டு பிரிக்ஸ் தலைமை, அனைத்து நாடுகளுடனும் நோ்மறையான மற்றும் ஆக்கபூா்வமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும்.
குறிப்பாக, அறிவியல், உயா் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு ரஷிய தலைமை முன்னுரிமை அளிக்கும்.
ரஷிய தலைமையின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெறும். நிகழாண்டு அக்டோபரில் கசான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் 16-ஆவது உச்சி மாநாடு எங்கள் தலைமையின் உச்சமாக இருக்கும்’ எனத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.