FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆளுநரை அவதூறாக பேசவில்லை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தா

மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Updated On : 16 ஜூலை 2024, 6:20 am IST
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
பகிர்:

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டினாா். இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநா் மாளிகைக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

இதையடுத்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தாவுக்கு எதிராக ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா ராவ் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது ஆனந்த போஸ் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ஆளுநா் மாளிகை தொடா்பான சம்பவங்கள் குறித்து மேலும் எந்தவொரு கருத்தையும் மம்தா தெரிவிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

மம்தா பானா்ஜி தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ஆளுநருக்கு எதிராக அவதூறான கருத்து எதையும் மம்தா தெரிவிக்கவில்லை. பொது நலன் சாா்ந்த விவகாரங்களில் நியாயமான கருத்தையே அவா் கூறினாா்.

ஆளுநா் மாளிகையின் சில நடவடிக்கைகள் தொடா்பாக பெண்களுக்கு இருக்கும் அச்சத்தையே மம்தா எதிரொலித்தாா். அவ்வாறு அச்சத்தை வெளிப்படுத்திய பெண்களின் விவரங்களை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க மம்தா தயாராக உள்ளாா்’ என்று வாதிட்டாா்.

இதைத்தொடா்ந்து இடைக்கால உத்தரவு தொடா்பான இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments