2024 - 25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு சலுகைகளும், புதிய வரி விதிப்பு முறையில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, புதிய வரி விதிப்பு முறையில், தனி நபர் ஒருவர், தனது வரித் தொகையில் ரூ.17,500ஐ மிச்சம் பிடிக்க முடியும்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், புதிய வருமான வரி விதிப்பு முறையில், நான் இரண்டு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளேன், இந்த மாற்றங்களின் பயனாக, மாத வருவாய் ஈட்டும் தனிநபர் ஒருவர், புதிய வருமான வரி விதிப்பு முறையில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.17,500ஐ மிச்சம் பிடிக்க முடியும் என்றார்.
அதாவது, ஒரு தனிநபர் வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, 2024 - 25ஆம் ஆண்டுக்கான வருமான வரியில், ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 5 சதவீத வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒருவர் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம் ஈட்டினால், நிலையான கழிவுத் தொகை ரூ.75 ஆயிரம் போக ரூ.19,25,00க்கு அவர் வரி செலுத்த வேண்டும். அதற்கு வரியாக ரூ.2,67,500 வரி விதிக்கப்படும். இதனுடன் செஸ் வரியை சேர்த்தால் ரூ.2,78,200 விதிக்கப்படும். இதுவே கடந்த ஆண்டு வரி விதிப்பு முறையாக இருந்தால் ரூ.2,96,400 வரி விதிக்கப்படும்.
இதில், கூடுதல் கட்டணங்கள் மற்றும் செஸ் வரி இல்லாமல் புதிய முறையால் 17,500 மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
ஆண்டு வருவாய் 10 லட்சமாக இருப்பவர்களுக்கு புதிய மாற்றத்தால் இதே முறையில் ரூ.10 ஆயிரம் வரை மிச்சப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது, ஆண்டு வருமானத்தைப் பொறுத்து வரி அளவில் மாறுபாடு ஏற்படுகிறது. அதாவது, நிர்மலா சீதாராமன் அறிவித்த ரூ.17,500 என்பது செஸ் வரி இல்லாமல் கூறப்படுவது, மேலும், உயர் வருமானப் பிரிவினருக்கான கூடுதல் கட்டணங்களும் இல்லாமல்.
மேலும், ஒருவர் ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை வருவாய் ஈட்டினால், அவருக்கு வருமான வரி இருக்காது, ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டினால் அவர்களுக்கு செஸ் வரி இல்லாமல் ரூ.10 ஆயிரம் மிச்சம் பிடிக்கலாம். செஸ் வரியை சேர்த்தால் சற்று பலன் அதிகரிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.