ஸ்விக்கி என்று பெயர் அச்சிடப்பட்ட டி-சர்ட் மற்றும் உணவுபொருள்களைக் கொணடு செல்ல உதவும் பைக்கு, விநியோகிப்பாளர்களே பணம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து தெலங்கானா ஜிக் மற்றும் தொழிலாளர் அமைப்பு என்ற எக்ஸ் பக்கத்தில், ஸ்விக்கி நிறுவனத்துக்குக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதில், உணவு விநியோகம் செய்யும் பணியில் சேருபவர்கள்தான், அவர்களுக்கான பொருள்களை காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டி-சர்ட், பை, ரெயின்கோட் என அனைத்திலும் ஸ்விக்கி என பெயர் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில், அது அந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்கானது எனும்போது, அதனை விநியோகிப்பவர்கள் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இது குறித்து விநியோகிப்பாளர்களுக்கு ஸ்விக்கி நிறுவனம் அனுப்பிய அறிக்கையையும் அந்த எக்ஸ் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. உணவு விநியோகிப்பாளர்கள் எப்போதும் அந்த பையை வைத்திருக்க வண்டும் என்றும், அது சேதமடைந்தால், அதற்கான தொகை இரண்டு தவணைகளாக கழிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில், ஒரு பையின் விலை ரூ.299 என்றும், டி-சர்ட், பை, ரெயின் கோட் என முழுவதுக்கும் ரூ.1199 என்றும், ரெயின் கோட் விலை ரூ.749 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவுக்கு பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இதுபோலவே மற்ற நிறுவனங்களும் செய்வதாகவும் சிலர் புகார் அளித்துள்ளனர். சிலர், உங்கள் தவறை சரி செய்யாவிட்டால், ஸ்விக்கி நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சிலரோ, முதலில், விநியோகிப்பவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என்றும், ஏதேனும் ஒன்று சேதமடைந்தால், புதிதாக வழங்கப்படும்போதுதான் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது, சிலர் மோசமாக பயன்படுத்துவது, சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவதாகவும் சிலர், இலவசப் பொருள்களுக்காக மட்டும் பதிவு செய்துவிட்டு, உணவு விநியோகப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.