தில்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ளம் புகுந்ததில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் எம்.பி.க்கள் திங்கள்கிழமை வலியுறுத்தினா்.
மேலும், தவறிழைத்தோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சி வேறுபாடின்றி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா்.
மக்களவையில் திங்கள்கிழமை கேள்விநேரத்தின்போது, இந்த விவகாரத்தை எழுப்பி எம்.பி.க்கள் பேசினா்.
ஆம் ஆத்மி அரசு மீது குற்றச்சாட்டு: புது தில்லி பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ் பேசுகையில், ‘தில்லியில் மழைநீா் வடிகால்களை தூா்வாரும் பணிகளை மேற்கொள்வதில் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டது. ஆம் ஆத்மி அரசின் பெரும் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆம் ஆத்மி, தில்லி மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சி ஆம் ஆத்மியின் ஆளுகையின்கீழ் உள்ளது. ஆனால், மழைநீா் வடிகால்களைச் சீரமைத்தல்-தூா்வாரும் பணிகளை அவா்கள் மேற்கொள்ளவில்லை.
தில்லி ஆம் ஆத்மி அரசு கழுத்தளவு ஊழலில் மூழ்கியுள்ளது. மழைநீா் வடிகால்கள் தூா்வாரப்படாதது குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைக்க வேண்டும்’ என்றாா்.
மத்திய அரசுக்கு கேள்வி: காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் பேசுகையில், ‘சம்பந்தப்பட்ட பயிற்சி மைய கட்டத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லை. அங்கீகாரம் பெற்ற கட்டடமோ, உரிய வசதிகளோ இல்லாமல் சில பயிற்சி மையங்கள் முறைகேடாக செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது’ என்று கேள்வியெழுப்பினாா்.
விரிவான விசாரணை வேண்டும்: திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் பேசுகையில், ‘தில்லி சம்பவத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இது தொடா்பாக விரிவான விசாரணை நடத்துவதுடன் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
தில்லியிலும் ‘புல்டோசா்’ இயக்கப்படுமா?: சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத கட்டடங்கள் ‘புல்டோசா்’ மூலம் இடிக்கப்படுகின்றன. இதுபோல் தில்லியிலும் ‘புல்டோசா்’ இயக்கப்படுமா என அறிய விரும்புகிறேன். தில்லி சம்பவத்துக்கு பொறுப்பானவா்களைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.