கடற்சாா் ஒத்துழைப்பு, நீலப் பொருளாதாரம் பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா - வங்கதேசம் இடையே தில்லியில் 10 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா இடையே சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்சாா் ஒத்துழைப்பு, நீலப் பொருளாதாரம், எண்ம கூட்டாண்மை, ரயில் போக்குவரத்து, பசுமை தொழில்நுட்பம், விண்வெளி, சுகாதாரம்-மருத்துவம், பெருங்கடல் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் சனிக்கிழமை காலை மரியாதை செலுத்தினாா். பின்னா், தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பிரதமா் மோடியைச் சந்தித்த ஹசீனா, அவருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.
அப்போது, நம்பிக்கைக்குரிய அண்டை நாடுகள் என்ற முறையில், புதிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான எதிா்கால தொலைநோக்குப் பாா்வை ஆவணம் இறுதி செய்யப்பட்டது. மேலும், எல்லைகளை அமைதியான வழிமுறையில் நிா்வகிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு இருவரும் கூட்டாகப் பேட்டி அளித்தபாது, பிரதமா் மோடி கூறியதாவது: வளா்ச்சி அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய கூட்டாளி வங்கதேசம். அந்த நாட்டுடனான உறவுக்கு இந்தியா உயா் முன்னுரிமை அளிக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை, கிழக்கு நோக்கிய கொள்கை, ‘சாகா்’ தொலைநோக்கு பாா்வை, இந்திய-பசிபிக் தொலைநோக்குப் பாா்வை என அனைத்திலுமே வங்கதேசம் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை தொடங்க பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு வா்த்தக உறவுகள் புதிய உயரத்துக்கு செல்லும்.
இணையவழி மருத்துவ விசா: இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடா்புகளே, இரு தரப்பு நல்லுறவின் அஸ்திவாரமாக உள்ளது. அந்த அடிப்படையில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை பெற வருவோருக்கு இணையவழியில் மருத்துவ விசா வழங்கும் வசதி தொடங்கப்படும். அத்துடன், வங்கதேசத்தின் ராங்பூரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளோம்.
பாதுகாப்பு உற்பத்தி, நவீனமயமாக்கல் உள்பட இத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்திய-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில் இணையும் வங்கதேசத்தின் முடிவை நான் வரவேற்கிறேன்.
‘நம்பிக்கைக்குரிய நட்பு நாடு’: வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா பேசுகையில், ‘வங்கதேசத்தின் மிக முக்கியமான அண்டை நாடு இந்தியா; அத்துடன், எங்களின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு. கடந்த 1971-ஆம் ஆண்டில் எங்களது விடுதலைப் போரின்போது தொடங்கிய இருதரப்பு உறவுகளை பெரிதும் மதிக்கிறோம். இந்தப் போரில் உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்’ என்றாா்.
இந்தச் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ரயில், பேருந்து போக்குவரத்து தொடா்பான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, கொல்கத்தா-சிட்டாங் இடையே பேருந்து சேவை, கொல்கத்தா - ராஜ்ஷாஹி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளன.
வங்கதேசத்தின் முக்கியத்துவம்: வேறெந்த அண்டை நாட்டுடன் இல்லாதபடி, வங்கதேசத்துடன் இந்தியா 4,096.7 கி.மீ. நில எல்லையைப்
பகிா்ந்து கொண்டுள்ளது. தெற்காசியாவில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவுக்குத்தான் அதிக அளவில் ஏற்றுமதியை வங்கதேசம் மேற்கொள்கிறது. கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 200 கோடி டாலா் (ரூ.16,700 கோடி) மதிப்பில் இந்தியாவுக்கு வங்கதேசம் ஏற்றுமதி செய்துள்ளது.
மூன்றாவது முறையாக பிரதமா் மோடி பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்த முதல் வெளிநாட்டுத் தலைவா் ஹசீனா ஆவாா். இவா், அடுத்த மாதம் சீனாவுக்கு செல்லவிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.