இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் 21.2 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘எம்ஜங்ஷன் சா்வீசஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023 ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 21.2 டன்னாக இருந்தது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்தியா 20.88 கோடி டன் நிலக்கரி இறக்குதி செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் நிலக்கரி இறக்குமதி சுமாா் 1.66 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் நாட்டின் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 13.65 கோடி டன்னாக உள்ளது. இது கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 13.69 கோடி டன்னை விட சற்று குறைவு.
2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 4.73 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது 2022-23-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 4.61 கோடியை விட அதிகம்.
கடந்த ஜனவரி மாதத்தில் பெரிய 2-ஆம் நிலை துறைமுகங்கள் மூலம் 1.98 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் 1.70 கோடி டன்னாக இருந்தது.
ஜனவரியில் மாத மொத்த நிலக்கரி இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.21 கோடி டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் இது 1.00 கோடி டன்னாக இருந்தது. அந்த மாதத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 47.4 லட்சம் டன்னிலிருந்து 45.0 லட்சம் டன்னாகக் குறைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.