மின்னஞ்சல் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து குவியும் வெடிகுண்டு மிரட்டல்களில் இம்முறை திகார் சிறைக்கும், தில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கும் வந்திருப்பதால் சோதனை செய்யும் நிபுணர்களுக்கே அது சோதனையாக மாறிவிட்டது.
திகார் சிறையில் வெடிகுண்டு நிபுணர் குழுவின் ஒரு பகுதியினரும் மருத்துவமனைக்கு ஒரு குழுவினரும் என விரைந்து சென்று முழுக்க சோதனை செய்து அதுபோன்ற எந்த வெடிகுண்டும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதுவரை பள்ளிகள், விமான நிலையம் என பொதுவிடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. அங்கெல்லாம் சோதனை என்றால், உள்ளே இருப்பவர்களே வெளியே செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு சோதனையை செய்யலாம். ஆனால் திகார் சிறையிலும், மருத்துவமனையிலும் என்ன செய்வது, உள்ளே இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல்தான் சோதனையை நிறைவு செய்ய வேண்டும்.
அதாவது, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்த மின்னஞ்சலில், குறிப்பிட்ட இந்தந்த இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது அடுத்த சில மணி நேரங்களில் வெடிக்கப்போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது வந்திருக்கும் மின்னஞ்சல், சைப்ரஸ் நாட்டிலிருந்து செயல்படும் மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் முகவரியிலிருந்து வந்துள்ளது. அதாவது, beeble.com என்ற முகவரியிலிருந்து வந்துள்ளது. இதே மின்னஞ்சலிலிருந்துதான் கடந்த ஞாயிறன்று மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனவே, இதன் பயனர் யார் என்பது குறித்து அந்த மின்னஞ்சல் நிறுவனத்துக்கு காவல்துறையினர் தகவல் கேட்டுள்ளனர்.
நடத்தப்பட்டிருக்கும் விசாரணையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர்தான் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.