இந்தியாவில் புயல், வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் பிற பேரிடர்கள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டினுள் இடம் பெயர்ந்துள்ளதாக ஜெனீவாவைச் சேர்ந்த ‘உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம்’ தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள ’உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கையில்’, இந்தியாவில் கடந்த 2022-ல் உள்நாட்டில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக இருந்ததாகவும், 2023-ல் அது சரிந்து 5,28,000 இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காலநிலை மாற்றம் மக்களிடையே மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளம், புயலினால் ஏற்படும் இடப்பெயர்வுகள் பெரும்பாலும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரே பகுதிகளிலேயே நடந்துள்ளன.
கூடுதலாக, 2023-ல் வன்முறை மற்றும் கலவரம் காரணமாக 67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அதிகமான இடப்பெயர்வு மணிப்பூரில் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-ல் இந்த எண்ணிக்கை 1,000 ஆக இருந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டின் மத்தியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட எல் - நினோ விளைவால், மிகக் குறைந்த அளவிலான மழைப்பொழிவு ஏற்பட்டதால் வெள்ளம் தொடர்பான பேரிடர்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இதனால் உள்நாட்டு இடப்பெயர்வு 2023-ல் குறைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல் - நினோ என்பது கிழக்கு பசிஃபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் அசாதாரண வெப்பமயமாதலை குறிப்பதாகும். எல் - நினோ விளைவை மோசமான பருவமழைக் காரணி என்றுக் குறிப்பிடலாம். இதனால், இந்தியா 5.65% குறைவான தென்மேற்கு பருவமழையைப் பெற்றுள்ளது.
மிக அதிகமான இடப்பெயர்வு ஜூன் 2023-ல் ஏற்பட்ட பிபர்ஜாய் புயலின் போது வந்த வெள்ளத்தால் ஏற்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, பிபர்ஜாய் புயல் வந்ததற்கு பின்னர் 1,05,000 மக்கள் குஜராத், ராஜஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கடுத்ததாக, அஸ்ஸாம் மாநிலத்தில் மிகக் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 91,000 மக்கள் இடம் பெயரக் காரணமாக இருந்துள்ளது. சில இடஙளில் ஆற்றங்கரைகள் உடைந்து, மண்ணரிப்பு ஏற்பட்டு வெள்ள சேதம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியிலும், கடந்தாண்டு ஜூலை 9 அன்று கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த 153 மி.மீ. கனமழை, 27,000 பேர் இடம் பெயரக் காரணமாகியுள்ளது.
மேலும், கலவரம் மற்றும் வன்முறை காரணமாக சூடான், பாலஸ்தீன் மற்றும் பிற பகுதிகளில் மக்கள் இடம்பெயர்வது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி உலகளவில் மொத்தமாக, 6.83 கோடி மக்கள் வன்முறை, கலவரங்களால் உள்நாட்டினுள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 77 இலட்சம் மக்கள் பேரிடர்களால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.