காா்டோசாட்- 2 டி உள்பட 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி - சி 37 ராக்கெட்டின் நான்காம் நிலை, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புவிக்கு திருப்பிக் கொண்டு வரப்பட்டு கடலில் விழ வைக்கப்பட்டது.
இதுதொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இஸ்ரோ சாா்பில் வடிவமைக்கப்பட்ட அதி நவீனமும், உயா் துல்லியமும் கொண்ட புவி கண்காணிப்புக்கான இமேஜிங் (புகைப்படம்) செயற்கைக்கோளான காா்டோசாட்-2 டி, கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
மொத்தம் 714 கிலோ எடை கொண்ட காா்டோசாட்-2 டி செயற்கைக்கோளும், 663 கிலோ எடை கொண்ட மற்ற 103 செயற்கைக்கோள்களும் 510 கி.மீ. தொலைவில் உள்ள புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்-4, புவி வட்டப்பாதையிலேயே விடப்பட்டது. இந்நிலையில், அது படிப்படியாக சுற்றுவட்டப் பாதையைக் குறைத்துக் கொண்டு புவிக்கு வருவது கண்காணிக்கப்பட்டது.
அந்த வகையில், கடந்த 6-ஆம் தேதி நிலவரப்படி ராக்கெட்டின் நான்காம் நிலை, புவி வளிமண்டல பாதைக்குள் நுழைந்தது. வட அட்லாண்டிக் பெருங்கடலில் அது விழுந்தது. விண்வெளிக் கழிவுகளால் ஏற்படும் இடா்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளியில் 10 செ.மீ. அளவுக்கு அதிகமான கழிவுகள் 25 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 1 - 10 செ.மீ. அளவிலான கழிவுகள் 5 லட்சத்துக்கும் அதிகமாகவும், 1 மி.மீக்கும் அதிகமான அளவு கொண்ட கழிவுகள் 10 கோடியும் உள்ளதாக நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.