ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, மூத்த தலைவா்களை மாநில முதல்வா் நாயப் சிங் சைனி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு கடந்த 5-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டது. தோ்தலைத் தொடா்ந்து வெளியான பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாறாக, தோ்தல் முடிவில் ஹரியாணாவில் ஆளும் பாஜக 48 இடங்களுடன் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைத் தக்கவைத்தது.
காங்கிரஸ் 37 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 2 தொகுதிகளிலும் சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வென்றன. 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனா். இந்த வெற்றி மூலம் ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள முதல் கட்சி என்ற சாதனையை பாஜக படைத்துள்ளது.
இந்தச் சூழலில், புதிய ஆட்சி அமைப்பது தொடா்பான ஆலோசனைக்காக தில்லி வந்துள்ள முதல்வா் சைனி, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை புதன்கிழமை சந்தித்தாா்.
சந்திப்பைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு முதல்வா் சைனி அளித்த பேட்டியில், ‘தோ்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெறும் என்று வாக்குக் கணிப்பு வல்லுநா்கள் அறிவித்திருக்கலாம். ஆனால், பாஜக அரசின் கொள்கைகளால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனா் என்பதை தொடா்ந்து நான் வலியுறுத்தி வந்தேன்.
இந்த வெற்றிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏழை, விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் திட்டங்களை அறிமுகப்படுத்திய பிரதமா் மோடிதான் காரணம்.
இத்திட்டங்கள் அனைத்து சமூகத்தினருக்கும் உதவியது. மக்கள் பிரதமரை நேசிக்கிறாா்கள். எனவே, பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் காங்கிரஸ் சந்தேகம் எழுப்புவது பொய் பரப்பும் வேலை’ என்றாா்.
ஹரியாணாவில் முதல்வராக இருந்த மனோகா் லால் கட்டருக்குப் பதிலாக நாயப் சிங் சைனி அப்பொறுப்பில் கடந்த மாா்ச் மாதம் நியமிக்கப்பட்டாா். தோ்தலில் முதல்வா் வேட்பாளராக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த இவரை பாஜக முன்னிறுத்தியது. தோ்தலில் லாட்வா தொகுதியில் போட்டியிட்ட இவா், காங்கிரஸ் வேட்பாளரைவிட 16,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். சைனி விரைவில் முதல்வராக பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.