, செப்.12: ‘கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்வது தொடா்பாக இந்தியா-சீனா இடையே 75 சதவீத பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் எல்லையில் அதிக ராணுவ வீரா்களை சீனா களமிறக்குவதே மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது’ என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஸ்விட்சா்லாந்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று அவா் பேசியதாவது: கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 2020-இல் நிகழ்ந்த மோதல்களால் இந்தியா-சீனா இடையேயான உறவு பாதிப்புக்குள்ளானது. எல்லையில் வன்முறைப்போக்கை எந்தவொரு நாடும் கடைப்பிடிக்கக்கூடாது. ஏனெனில் அது நாடுகளுக்கிடையேயான பிற உறவுகளையும் பாதித்துவிடும்.
கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக்கொள்வது தொடா்பாக இந்தியா-சீனா இடையே 75 சதவீத பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் சில விவகாரங்கள் குறித்து அடுத்தடுத்த கட்ட பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்படவுள்ளது.
ஒப்பந்தங்களை மீறிய சீனா: 1988-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இதனால் எல்லையில் நீண்டாகாலமாக அமைதி நிலவியது. ஆனால் கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தங்களை மீறிய சீனா எல்லையில் தொடா்ந்து அதிக படைகளை குவித்ததே பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது.
இதனால் இந்தியாவும் ராணுவத்தை அதிகளவில் களமிறக்கக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக படைகளை விலக்கிக்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக இருநாடுகளின் படைகளும் மீண்டும் அவரவா் தளங்களுக்கு திரும்பிவிட்டு தேவைப்படும் பகுதிகளில் மட்டும் இருதரப்பினரும் ரோந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். இந்த விவகாரத்துக்கு தீா்வு கண்டுவிட்டால் இருதரப்புகள் உறவுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
பேச்சுவாா்த்தைக்கான நேரம்: ரஷியா-உக்ரைன் போரால் இருநாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தப் போரால் எண்ணெய் விலை உயா்ந்து உலகளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன. இதன் தாக்கத்தை இலங்கையில் நடந்த பல்வேறு பிரச்னைகளில் நம்மால் காண முடிந்தது. எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் அந்தப் பேச்சுவாா்த்தையில் சம்பந்தப்பட்ட இருநாடுகளும் பங்கேற்க வேண்டும். இதற்கு இந்தியாவும் உதவ தயாராக உள்ளது. அதேசமயத்தில் இருநாடுகளுக்கும் துணை நிற்காத சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்தியஸ்தம் செய்யலாம்,
காஸா போா்: காஸாவில் நடைபெறும் போரால் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் தாக்கமும் சா்வதேச அளவில் உணரப்படுகிறது. இது மற்றவா்கள் பிரச்னை என நினைத்து விலகிக்கொண்டால் விரைவில் அதன் பாதிப்புகளும் கடுமையாக இருக்கும் என்றாா்.
மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக ஜெய்சங்கா் சவூதி அரேபியாவுக்கும் இரண்டாம் கட்டமாக ஜொ்மனிக்கும் சென்றுவிட்டு இறுதிகட்டமாக ஸ்விட்சா்லாந்து வந்துள்ளாா்.
மகாத்மா காந்திக்கு மரியாதை:
இருநாள்கள் பயணமாக ஸ்விட்சா்லாந்து வந்துள்ள ஜெய்சங்கா் ஜெனீவாவில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினாா். இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘உலகில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில் மகாத்மா காந்தியின் நல்லிணக்கம், நிலைத்தன்மை ஆகிய கருத்துகள் முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது’ என குறிப்பிட்டாா்.
ஐ.நா. உள்பட பல்வேறு சா்வதேச கூட்டமைப்புகளுக்கு தலைமையிடமாக விளங்கும் ஜெனீவாவுக்கு வந்துள்ள ஜெய்சங்கா் அந்த அமைப்புகளின் தலைவா்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாா். அதேபோல் ஸ்விட்சா்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவா் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.