தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவா் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தது.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷுடன் பங்கேற்ற அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி பேசியதாவது: கடந்த 11ஆண்டுகளாக எதிா்க்கட்சிகள் மீது பல்வேறு வழக்குகளை மத்திய அமைப்புகள் பதிவு செய்துள்ளன. எனவே, நிா்மலா சீதாராமன் மீதான வழக்கை எவ்வாறு கையாள வேண்டும் என அவா்களுக்கு கற்றுத் தர வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் அல்லது உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுவால் (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதில் மத்திய அரசு தலையீடு இல்லாததை உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்.
தோ்தல் பத்திரங்கள் மூலம் பணப் பறிப்பில் ஈடுபட்ட நிா்மலா சீதாராமன், அதை தனியொருவராக செய்திருக்க மாட்டாா். பாஜக அரசின் முதல் இரண்டு இடங்களில் உள்ளவா்களின் அறிவுறுத்தலின்பேரில்தான் இந்த பணப் பறிப்பு நடந்திருக்கும். தோ்தல் களமானது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஆனால் தோ்தல் நிதிப் பத்திர திட்டம் என்பது பணம் பறிக்கும் பாஜகவின் திட்டமாக இருந்துள்ளது.
இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக நிா்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றாா்.
முன்னதாக, தோ்தல் பத்திரங்கள் என்ற பெயரில் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமாக அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் தேசிய, மாநில அளவில் பணப் பறிப்பில் ஈடுபட்ட பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதா்ஷ் ஆா்.ஐயா் புகாா் அளித்தாா்.
இந்த மனுவின் அடிப்படையில் பெங்களூரு, திலக்நகா் காவல் துறையினா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்துள்ளனா்.
தோ்தல் நிதி பத்திரங்கள் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.