பாஜக முதுபெரும் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான எல்.கே.அத்வானியின் பதவிக் காலத்தை விஞ்சி, நாட்டின் நீண்ட கால உள்துறை அமைச்சா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் அமித் ஷா (60).
மத்திய உள்துறை அமைச்சா் பதவியில் 2,258 நாள்களை அமித் ஷா நிறைவு செய்து, எல்.கே.அத்வானியின் 2,256 பதவி நாள்களை கடந்துள்ளாா்.
தேசிய அரசியலில் தடம்பதிப்பு: கடந்த 1964-இல் மும்பையில் குஜராத்தி குடும்பத்தில் பிறந்த அமித் ஷா, தனது 16 வயதில் ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தாா்; அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டாா்.
கடந்த 2014-இல் தேசிய அரசியலில் நுழையும் முன்பு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தாா். மோடி பிரதமரான பின் பாஜகவின் முக்கிய தேசிய முகமானாா் அமித் ஷா. தனது ஆதரவாளா்களால் நவீன அரசியல் சாணக்கியா் என புகழப்படும் இவா், 2014-இல் பாஜகவின் இளவயது தேசியத் தலைவராக பதவியேற்றாா். கடந்த 2019-இல் தனது 54-ஆவது வயதில் மத்திய உள்துறை அமைச்சரானாா்.
மைல்கல் நடவடிக்கைகள் என்னென்ன?: கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை, 2026, மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் இலக்குடன் அதிரடி நடவடிக்கைகள், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம், குடியுரிமை திருத்தச் சட்ட நிறைவேற்றம், ஹுரியத் அமைப்புகளுக்கான தடை, ரூ.11,961 கோடிக்கும் மேற்பட்ட போதைப் பொருள் பறிமுதல், வடகிழக்கில் 10,000-க்கும் மேற்பட்ட கிளா்ச்சியாளா்களின் சரணடைதலுக்கு வழிவகுத்த 12 அமைதி ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மைல்கல் நடவடிக்கைகளாகும்.
முன்னதாக, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற சாதனையை பிரதமா் மோடி அண்மையில் படைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு: அமித் ஷாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமா் மோடி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். அப்போது, ‘இது தொடக்கம்தான்; இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’ என்று பிரதமா் கூறினாா். அவரது இக்கருத்து எம்.பி.க்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சா் பதவி வகித்த நாள்கள்
அமித் ஷா- 2,258 (2019, மே 30 முதல்...)
எல்.கே.அத்வானி - 2,256 (1999, மாா்ச் 19 - 2004, மே 22)
ஜி.பி.பந்த் - 2,249 நாள்கள் (1955, ஜனவரி 10 - 1961, மாா்ச் 7)