கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியைப் பார்த்துக் கொள்வதற்காக தான் பெற்றுவந்த ரூ.1.2 கோடி பெறும் வேலையை உதறித்தள்ளிய சம்பவம் ரெடிட் தளத்தில் வெளியிட்ட பதிவில் பல்வேறு தரப்பினரின் இதயங்களையும் வென்றுள்ளது.
தனது பதிவில், பெயர் குறிப்பிடப்படாத பயனர் தன்னை கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும், அங்கிருந்து வந்து கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு அற்புதமான வாழ்க்கையை உருவாக்க முடிந்தது என்றும் விவரித்துள்ளார்.
அவர் கடந்த ஏழு மாதங்களில் தான் ஜீரோவிலிருந்து சுமார் ரூ. 7 கோடி வரை வருவாய் ஈட்டியதாகவும், தன்னுடைய கர்ப்பிணி மனைவியின் விருப்பத்தின் பேரிலேயே தனது வேலையை ராஜிநாமா செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவில், “நான் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவன். பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரிந்து கடந்த 7 ஆண்டுகள் பணிபுரிந்து கிட்டத்தட்ட ரூ.7 கோடி வரை சம்பாதித்தேன்.
நான் கடைசியாகப் பார்த்த வேலை மிகவும் நன்றாக இருந்தது. ரூ. 1.2 கோடி சம்பளம், வீட்டிலிருந்தே வேலை. ஜெயநகரில் நல்ல இடம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, என் மனைவி கர்ப்பமானார். ஒரு வருடம் வேலையை விட்டுவிட்டு, என்னுடன் இருக்கச் சொன்னேன். ஆனால், அவள் தொடர்ந்து வேலை செய்து என்னுடைய நேரத்தைக் குறைக்க விரும்பினாள். அவளும் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறாள்.
எனது மனைவியை பள்ளிப் பருவத்தில் இருந்தே 15 வருடங்களாகத் தெரியும். நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு அவளுக்காக இருக்க முடிவு செய்தேன். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தேன்.
தோட்ட வேலைகளையும் செய்தேன். அவளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றேன். எங்கள் பெற்றோரை எங்களுடன் கொஞ்ச காலம் தங்க வைத்தேன். ரூ.1 கோடி வேலையை விட்டாலும் மனைவியுடன் நேரத்தைச் செலவிடுவதைப் பாக்கியமாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கார்ப்பரேட் வேலையைவிட்டு விட்டு இருந்தாலும், வருங்காலங்களில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருந்தாலும், பலரும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மற்றொரு பயனரின் பதிவில், “எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. பலராலும் வேலையை விட்டு வீட்டில் இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாது. நீங்கள் அதிர்ஷ்டசாலி, உங்கள் மனைவியும் அதிர்ஷ்டசாலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனரின் பதிவில், “உனக்காக சந்தோஷப்படுகிறேன் நண்பா, இந்த மோசமான பணியிட கலாசாரத்தில் இதைச் செய்ய தைரியமும் ஆடம்பரமும் இருப்பது மிகவும் அரிது. இது ஒரு அற்புதமான நேரம், உங்களின் குழந்தைக்கு வாழ்த்துக்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.