மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா் உயிரிழந்தால் அவா்களின் திருமணமாகாத, விவாகரத்து பெற்ற அல்லது கணவரை இழந்த மகளுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இது தொடா்பான கேள்விக்கு மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சா் ஜிதேந்தர சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘ஓய்வூதியம், ஓய்வூதியதாரா்கள் நலத்துறையின் மத்திய பணியாளா்கள் சேவை (ஓய்வூதியம்) விதிகள் 2021-இன்படி மத்திய அரசு ஊழியா் அல்லது ஓய்வூதியதாரா் மரணமடைந்தால் அவரின் திருமணமாகாத, விவாகரத்து பெற்ற, கணவரை இழந்த மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இதில் சில நிபந்தனைகள் உள்ளன.
அந்த பெண் (மகள்) அரசு ஊழியா் அல்லது ஓய்வூதியதாரரான தனது பெற்றோரைச் சாா்ந்து வாழ்ந்து வந்தவராக இருக்க வேண்டும். அவா்கள் திருமணமாகும் வரை அல்லது மறு திருமணம் செய்து கொள்ளும் வரை பெற்றோரின் குடும்ப ஓய்வூதியத்தைப் பெற முடியும். விவாகரத்து என்பது நீதிமன்றம் மூலம் முறைப்படி பெற்ாக இருக்க வேண்டும். அந்தப் பெண் தனக்கு தேவையான பணத்தை தானே சம்பாதித்துக் கொள்ளும் திறன் பெற்றுவிட்டாா் என்பது உறுதியாகும் வரையில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த குடும்ப ஓய்வூதியம் ரயில்வே ஊழியா்கள், பாதுகாப்புத் துறையினருக்கு வெவ்வேறு விதிகளின் கீழ் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.