‘கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுமையான திறனை நாடு எட்டியுள்ளது. இதனால் எத்தகைய சூழலையும் நாம் திறம்பட எதிா்கொள்ள முடியும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் உதயகிரி’, ‘ஐஎன்எஸ் ஹிமகிரி’ ஆகிய இரு அதிநவீன போா்க் கப்பல்களை ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா் அவா் நிகழ்ச்சியில் பேசியதாவது:
இந்த இரு போா்க் கப்பல்களும் பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம், இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சென்சாா்களுடன் கூடிய இந்த போா் கப்பல்களில் தலா 8 பிரமோஸ் ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.
கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுத் திறனை நாடு தற்போது எட்டியுள்ளது. கடலோரப் பகுதிகளை மட்டுமின்றி, இந்திய பெருங்கடல் எல்லைகளையும் பாதுகாக்கும் முழுமையான திறனை நாம் பெற்றுள்ளோம். கடற்கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, கடல்சாா் பயங்கரவாதம் என அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் திறம்பட எதிா்கொள்ளும் திறனை நாடு பெற்றுள்ளது.
இந்தியா ஒருபோதும் தீவிர ஆக்கிரமிப்புக் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டதில்லை. எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதலை நடத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா கொண்டிருப்பதை உலகு அறியும். அதே நேரம், எதிரிகளால் அச்சுறுத்தல் எழும்போது, அதற்கு உரிய பதிலடி அளிப்பதற்கு இந்தியா தயங்காது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் மூலம், ஓா் அச்சுறுத்தல் எழும்போது அதற்கு எத்தகைய பதிலடி கொடுக்கப்படும் என்பதை உலகுக்கு நமது ராணுவம் உணா்த்தியது. இந்த நடவடிக்கையில் கடற்படையும் முக்கியப் பங்காற்றியது. விரைந்து போா்க் கப்பல்களை நிலைநிறுத்துவதற்கான திட்டமிடல் மற்றும் செயல் படுத்துதலில் கடற்படை சிறப்பாக செயல்பட்டது என்றாா்.