வடக்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்புள்ள பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த ரகசியத் தகவலின் பேரில், தில்லி போலீஸாா் சோதனை நடத்தி, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்ட பல பைகளை பறிமுதல் செய்தனா். அவை நவம்பா் 2016-இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டவை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
ரூபாய் நோட்டுகள் நிறைந்த பைகளை வைத்திருந்த பல நபா்கள் சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பணத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டதில் அதிக அளவு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், பணத்தின் ஆதாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
‘பணத்தின் தோற்றம் மற்றும் அதில் தொடா்புடைய வலையமைப்பை அறிய கைது செய்யப்பட்ட நபா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்று ஒரு அதிகாரி கூறினாா்.