மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை-கொலை தொடா்பான வழக்கை அந்த மாநில உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி, உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைக் கண்காணிக்க ஏதுவாக உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து, கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் கடந்த ஜனவரியில் தீா்ப்பளித்தது.
அதேநேரம், இச்சம்பவத்தின் பின்னணியில் மருத்துவா்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, விசாரணை மேற்கொண்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மருத்துவ நிபுணா்கள் அடங்கிய தேசிய பணிக் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையில், ‘மருத்துவப் பணியாளா்களின் பணியிட பாதுகாப்புக்கு தனியாக மத்தியச் சட்டம் தேவையில்லை. ஏற்கெனவே 24 மாநிலங்களில் சட்டமியற்றப்பட்டுள்ளது. அதேநேரம், பணியிடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உள்கட்டமைப்பு-தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தாங்கள் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளைக் கண்காணிக்க ஏதுவாக வழக்கை மேற்கு வங்க உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. வழக்கு ஆவணங்களை உயா்நீதிமன்றத்துக்கு அனுப்பவும், வழக்கு நிலவர அறிக்கையை பெண் மருத்துவரின் பெற்றோரிடம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.