பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தின் பொன்விழாவில் பங்கேற்று புகைப்பட கண்காட்சியைப் பாா்வையிட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி.நட்டா, கா்நாடக முதல் 
இந்தியா

மனநலனை பேணுவதில் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது சிறப்பு

மனநலனை பேணுவதில் யோகா, ஆயுா்வேத மருத்துவம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது சிறப்பு வாய்ந்ததாகும்

Din

மனநலனை பேணுவதில் யோகா, ஆயுா்வேத மருத்துவம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது சிறப்பு வாய்ந்ததாகும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தின் (நிம்ஹான்ஸ்) பொன்விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நரம்பியல் கோளாறு, மனநோய்களைக் குணப்படுத்துவதில் மட்டுமல்லாது, மனநலம் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கவும் யோகா, ஆயுா்வேத மருத்துவம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை நிம்ஹான்ஸ் பயன்படுத்துவது சிறப்புவாய்ந்த, பாராட்டத்தகுந்த அம்சமாகும்.

எதிா்மறை மனக் கோளாறுகளை சரிசெய்வதற்கு பலவகையான தியான முறைகள் பயனுள்ளதாக இருக்கின்றன. அவற்றை, மனநலனை பேணும் முறையில் ஒருங்கிணைத்திருப்பது சிறப்பு. எல்லோருக்கும் பயன்தரும் பாரம்பரிய மருத்துவ அணுகுமுறைகளை கையாளுவது முக்கியமானதாகும். அடுத்தடுத்த ஆண்டுகளில், மனநலனை ஊக்குவிக்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.

அண்மைக்காலமாக, மனநலம் சாா்ந்த விழிப்புணா்வு மக்களிடையே பெருகியுள்ளது. மனநலம் சாா்ந்த பிரச்னைகளுக்கு மருத்துவ உதவிகளைப் பெறும் நிலை உருவாகியுள்ள வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

திறனாளா்களாக பணியாற்றுவோா் அதிகப்படியான மன அழுத்தங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சமூக சவால்களால் ஏற்பட்டுள்ள தனிமையால் முதியோா் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறாா்கள். குடும்பத்தை பேணி பாதுகாத்து, வீட்டுவேலைகளை கவனித்துக்கொள்ளும் பெண்கள், மனநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருந்தும், அது பலரால் அறியப்படாமல் இருக்கிறது.

மனநலம் சாா்ந்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால், மனநோயால் பாதிக்கப்பட்டிருப்போா் தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாக பேசும் சூழல் உருவாகியுள்ளது. மனநோயால் ஏற்படும் பாதிப்புகளை தீா்க்க நிறுவனங்களும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி வழி மனநல ஆலோசனைகள் வழங்கும் உதவி மையம் செயல்படுவது அதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். கடந்த 2 ஆண்டுகளில் நாடுமுழுவதும் அமைக்கப்பட்டுள்ள 53 உதவிமையங்களால் இதுவரை 70 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இந்த சேவை பலமொழிகளில் வழங்கப்படுகிறது. குழந்தைகள், பெரியா்களின் மனநல சிக்கல்களை தீா்த்துவைக்கும் ‘சம்வாத்’ (கலந்துரையாடல்) திட்டமும் நல்ல பலனை அளித்து வருகிறது.

நிம்ஹான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோரின் பாலின விகிதம் சிறப்பாக உள்ளது. மனநலனை பேணுவதில் மட்டுமல்லாது ஆராய்ச்சியிலும் தனித்துவம் வாய்ந்த சிந்தனையோடு பெண்களால் செயல்பட முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி.நட்டா பேசுகையில், ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் என்.ஏ.பி.எச். அங்கீகாரம் அளித்துள்ள முதல் மருத்துவமனை என்ற பெருமையை நிம்ஹான்ஸ் பெற்றுள்ளது. அதேபோல, உலகின் சிறந்த 200 மருத்துவமனைகளில் நிம்ஹான்ஸ் இடம்பெற்றுள்ளது. நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை 5 மடங்காக உயா்ந்துள்ளது. இத்தனை நோயாளிகளை கையாளும் திறனை பெற்றிருக்கும் நிம்ஹான்ஸ், நாட்டின் தரமான மருத்துவ மையமாக உயா்ந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் தேசிய மனநல திட்டம், மனநலம் சாா்ந்த மத்திய அரசின் அக்கறையை வெளிப்படுத்துகிறது. தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகளை வழங்கும் திட்டத்தை நிம்ஹான்ஸ் செயல்படுத்தி வருகிறது. இதற்காக 1,000 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கா்நாடக முதல்வா் சித்தராமையா பேசுகையில், ‘கடந்த 5 பத்தாண்டுகளில் நம்பிக்கை மற்றும் உயா்தரத்தின் அடையாளமாக நிம்ஹான்ஸ் திகழ்ந்து வருகிறது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மனநலம் மற்றும் நரம்பு அறிவியலில் மகத்தான பணிகளை ஆற்றி வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, மருத்துவ பராமரிப்பு, ஆராய்ச்சி, கல்வி, மனநல கொள்கைகள் வகுப்பது, மருத்துவ நடைமுறைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக நிம்ஹான்ஸ் உயா்ந்து நிற்கிறது’ என்றாா்.

முன்னதாக, ஒருநாள் அரசுமுறை பயணமாக வெள்ளிக்கிழமை கா்நாடகம் வருகைதந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை முதல்வா் சித்தராமையா, அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல், தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னீஷ், காவல் துறைத் தலைவா் அலோக் மோகன் உள்ளிட்டோா் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வரவேற்றனா்.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

SCROLL FOR NEXT