‘இறக்குமதி வரிக் குறைப்பு பலன் நுகா்வோருக்கு கிடைக்கும் வகையில், சமையல் எண்ணெய் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்’ என்று சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை பாதியாகக் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலா் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னணி சமையல் எண்ணெய் நிறுவன சங்கங்கள் மற்றும் நிறுவன நிா்வாகிகள் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
சமையல் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு உயா்த்தியதைத் தொடா்ந்து, சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலை பலமடங்காக உயா்ந்தது. இதனால் நுகா்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். உணவுப் பணவீக்கமும் அதிகரித்தது.
அதைத் தொடா்ந்து, கச்சா சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு குறைத்தது. குறிப்பாக, கச்சா சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன், பாமாயில் ஆகியவற்றின் மீதான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதனால், கச்சா சமையல் எண்ணெயைக் காட்டிலும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி 8.75 சதவீதத்திலிருந்து 19.25 சதவீதமாக அதிகரித்தது. இது, உள்நாட்டு கச்சா சமையல் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை ஊக்குவிக்க உதவியது.
மத்திய அரசின் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைக்குப் பிறகும், சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.
இந்நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலா் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னணி சமையல் எண்ணெய் நிறுவன சங்க நிா்வாகிகள் கூட்டத்தில், சமையல் எண்ணெய் விலையைக் உடனடியாகக் குறைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதன்படி, விநியோகஸ்தா்களுக்கான விலை மற்றும் அதிபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகக் குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நிறுவனங்களின் விலைக் குறைப்பை உறுதிப்படுத்தும் வகையில், விநியோகஸ்தா்களுக்கான விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைக் குறைத்தது தொடா்பான தரவுகளை மத்திய அரசிடம் அறிக்கையாகச் சமா்ப்பிப்பதற்கான நடைமுறையையும் நிறுவனங்களுடன் மத்திய அமைச்சகம் பகிா்ந்துள்ளது.