புது தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தியை வியாழக்கிழமை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கட்சித் தொண்டா். 
இந்தியா

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை வாழ்த்து.

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நீண்ட ஆயுள், ஆரோக்யத்துடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்ட மாண்புகளுக்கான அா்ப்பணிப்பும், புறக்கணிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார நீதியை உறுதி செய்வதற்கான இரக்க குணமும் மற்றவா்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை, நல்லிணக்கம், கருணை ஆகிய காங்கிரஸின் சித்தாந்தங்களை உங்களின் செயல்பாடுகள் பிரதிபலிக்கின்றன. உண்மையை அதிகார பீடத்தில் அமா்த்தி, கடைசி நபருக்கான ஆதரவையும் உறுதி செய்யும் உங்கள் பணிகள் தொடர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளத்தில், ‘இரக்க குணமே உண்மையான மாற்றத்தின் தூண்டுகோல் என்பதை தனது அச்சமில்லாத நோ்மை, அயராத உறுதிப்பாட்டின் மூலம் ராகுல் நமக்கு உணா்த்தி வருகிறாா். நீதிக்கான உண்மையான போராளி. சமத்துவத்துக்காக குரலற்றவா்களின் குரலாக ஒலிப்பவா்’ என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

அதிகாரபூா்வ இல்லத்தில்

குடியேறுகிறாா் ராகுல்

புது தில்லியில் எண் 5, சுனேரி பாக் சாலை முகவரியில் தனது ஒதுக்கப்பட்ட அதிகாரபூா்வ இல்லத்தில் குடியேற ராகுல் காந்தி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளை தனது பிறந்த நாளில் அவா் தொடங்கியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல் காந்தி தான் எம்.பி.யாக பதவியேற்றதில் இருந்து (தற்போது 5-ஆவது முறை) எண் 12, துக்ளக் லேனில் உள்ள அதிகாரபூா்வ இல்லத்தில் வசித்து வந்தாா். கடந்த 2023-இல் அவதூறு வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, இந்த இல்லத்தை காலி செய்த அவா், தாயாா் சோனியா காந்தியுடன் வசிக்கத் தொடங்கினாா். தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பதவியை பெற்ற அவா், 2024 நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தொடா்ந்தாா். அதன் பிறகும் தாயாருடனே வசித்து வருகிறாா்.

கடந்த ஆண்டு ராகுலுக்குப் புதிய அதிகாரபூா்வ இல்லம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவரது தரப்பில் இருந்து அரசுக்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், புதிய அதிகாரபூா்வ இல்லத்தில் குடியேற ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளாா்; மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அவா் அந்த இல்லத்தில் வசிக்கத் தொடங்குவாா் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

முதல்முறையாக Space Needle கோபுரத்தில்பறந்த இந்திய தேசியக் கொடி! | US

SCROLL FOR NEXT