அணு உலைகள்.. 
இந்தியா

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

Din

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையொப்பமானது. சுமாா் 17 ஆண்டுகளுக்குப் பின்னா், அந்த ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலை பயன்படுத்துவதற்கு இருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்க எரிசக்தி துறை (டிஓஇ) அனுமதி அளித்துள்ளதன் மூலம், அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக டிஓஇயிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்த நிலையில், அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.

இது இந்தியாவில் உள்ள அந்த நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான ஹோல்டெக் ஏஷியா, டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ், லாா்சன் அண்ட் டூப்ரோ ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளுடன் ஓா் ஆலைக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வகைப்படுத்தப்படாத நவீன அணு உலை தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. பத்து ஆண்டு காலத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, 5 ஆண்டு கால இடைவெளியில் மறுஆய்வு செய்யப்படும்.

அணு ஆயுத தயாரிப்புக்கு அல்ல:

சா்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ், ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் பரிமாற்றம் செய்யும் தகவலும், தொழிலநுட்பமும் அமைதியான அணுசக்தி நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுமே தவிர, ராணுவ காரணங்களுக்காக அணு ஆயுதங்கள் அல்லது அணுகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படாது என்று மத்திய அரசு அளித்த உத்தரவாதங்களை ஏற்றும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் கீழ் வழங்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் உதவி குறித்து டிஓஇயிடம் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் காலாண்டு அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் பயனை முழுமையாக எட்டும் நோக்கில், இருநாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதைத் தொடா்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை தொடா்ந்து மின்துறையில் இந்தியாவின் மிகப் பெரிய பொறியியல் ஆலோசனை நிறுவனமான டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் செயல்படும் என்றும், இந்தியாவில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான சில உபகரணங்களை தயாரிக்க லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துடன் ஹோல்டெக் இன்டா்நேஷனல் கூட்டு சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹோல்டெக் நிறுவனா் இந்திய வம்சாவளி அமெரிக்கா்:

இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க மத்திய அரசுக்குச் சொந்தமான என்பிசிஐஎல், என்டிபிசி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விரு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் நிறுவனரான கிரிஸ் பி சிங், இந்திய வம்சாவளி அமெரிக்கராவாா்.

தேசிய விருதுகள்: புனைவு அல்லாத திரைப்பட விருதுகள்!

கூலி படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்!

தேசிய விருதுகள்: சிறந்த மலையாளத் திரைப்படம் 'உள்ளொழுக்கு'

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

71-ஆவது தேசிய விருதுகள்: பார்க்கிங் - சிறந்த தமிழ் படம்!

SCROLL FOR NEXT