பாலியல் வழக்கில் சிக்கியுள்ள மஜத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பமாக, தவறான பழக்கம் குறித்து அவரது தாய் பவானிக்கு தெரியும் என்று கார் ஓட்டுநர் கார்த்திக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, கார் ஓட்டுநர் கார்த்திக் (34) நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தவறான பழக்க வழக்கங்கள் குறித்தும், பல பெண்களுடன் உறவில் இருப்பதும் அவரது தாய் பவானிக்கு நன்கு தெரியும் என்றும், பெண்களுடன் இருக்கும் நேரத்தை ரேவண்ணா தனது செல்போனில் விடியோ எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் என்றும் கூறியிருக்கிறார். அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் அசோக் நாயக், கார்த்தியிடம் நடத்திய விசாரணையின்போது இந்த விவரம் வெளியாகியிருக்கிறது.
கார்த்திக் தெரிவித்திருக்கும் தகவலின்படி, ஹஸன் எம்.பி.யாக இருந்தக் காலக்கட்டத்தில் மட்டும் பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போனில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மோசமான படங்களும், 40க்கும் மேற்பட்ட விடியோக்களும் இருந்திருக்கும் என்றும், இந்த தவறான பழக்க வழக்கம் குறித்து, தான், பிரஜ்வலின் தாய் பவானியிடம் தெரிவித்ததாகவும், முதலில் அதனை அவர் நம்பவில்லை என்றும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைக் காட்டிய பிறகே அவருக்கு உண்மை தெரிய வந்ததாகவும், தனக்கு அந்த விடியோக்களை அனுப்பும்படியும், தான் பிரஜ்வலின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகவும், இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் பவானி கேட்டுக்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ஆனால், அனைத்துக்கும் மாறாக, தான் இது பற்றி பவானியிடம் கூறியதை, அவர் தனது மகன் பிரஜ்வலிடம் கூறியதால், பிரஜ்வல் ரேவண்ணா, தன்னைக் கடுமையாக கடிந்துகொண்டதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்களும் விடியோக்களும் பொது வெளியில் எப்படி வந்தது என்பது குறித்து கார்த்தியிடம் கேட்டதற்கு, ஒரு நாள், பிரஜ்வல் தன்னுடைய செல்ஃபோனை காரிலேயே விட்டுவிட்டு, ஜெயநகரில் உள்ள தனது பெண் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். ஒரு ஆர்வத்தில்தான் நான் அவரது செல்போனை எடுத்துப் பார்த்தேன். அவரது பாஸ்வேர்டு எனக்குத் தெரியும். அதில், அரசியல் தொண்டர்கள், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் ஏராளமான பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பார்த்தேன். உடனே அது அனைத்தையும் என் செல்ஃபோனுக்கு மாற்றிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் பதுங்கியிருந்த முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, ஜொ்மனி நாட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா சா்வதேச விமானநிலையத்துக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
இவர் மீது, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹொளேநரசிப்புரா காவல் நிலையத்தில் ஏப். 27ஆம் தேதி முதல் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது வீட்டில் வேலை செய்து வந்த 47 வயது பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணா குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவரது மோசமான விடியோக்கள் பொது வெளிக்கு பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் பிரஜ்வல் மீது எழுந்தன.
பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து மஜதவில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.