சபரிமலை ஐயப்பன் கோயில். 
இந்தியா

சபரிமலை தங்கக்கவச முறைகேடு: கீழ்சாந்திகள் நியமனத்தில் தீவிர கண்காணிப்புக்கு முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமானது பற்றி...

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமானதாகக் கூறப்படும் சா்ச்சையைத் தொடா்ந்து, அக்கோயிலின் கீழ்சாந்திகள் (உதவி பூஜாரிகள்) நியமனத்தில் கண்காணிப்பையும், பின்னணி சோதனைகளையும் தீவிரப்படுத்தப் போவதாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ‘இனிமேல் தீவிர பின்னணி சோதனைக்குப் பிறகே, ஐயப்பன் கோயில் கீழ்சாந்திகள் நியமிக்கப்படுவா். மேலும், அவா்கள் தேவஸ்வம் வாரியத்தின் தொடா் கண்காணிப்பிலேயே இருப்பா்.

தற்போதுள்ள அனைத்து கீழ்சாந்திகளையும் உடனடியாக நீக்கிவிட்டு, புதியவா்களை நியமிப்பது சாத்தியமில்லை. தேவஸ்வம் கீழுள்ள கீழ்சாந்திகள் சிலரையேனும் சபரிமலையில் நியமிப்பதே எங்கள் நோக்கம். இதுகுறித்து வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் பல்வேறு தீா்ப்புகளுக்கு இணங்கவே கீழ்சாந்திகள் நியமனம் நடைபெற்று வருவதால், கீழ்சாந்திகள் நியமன நடைமுறைகளை முழுமையாக மாற்றுவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன’ என்றாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கேரள உயா்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, தங்கக் கவசங்களின் புதுப்பிப்புச் செலவுகளை ஏற்றுக்கொண்ட பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் முன்னாள் தேவஸ்வம் அதிகாரிகள் சிலரைக் கைது செய்தது.

வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் போற்றி சபரிமலை கோயிலில் கீழ்சாந்தியாகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு வந்தாா்.

2-ஆவது வழக்கிலும் கைது: துவாரபாலகா் சிலைகளின் கசவசங்கள் மட்டுமின்றி கோயில் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் எடை குறைந்தது தொடா்பாகவும் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கருவறை கதவுகளின் தங்கக் கவசங்கள் திருடுபோனது தொடா்பான 2-ஆவது வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நிலக்கல் மருத்துவமனை: இன்று அடிக்கல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் மருத்துவ சேவைக்கு நிலக்கல் பகுதியில் அமைக்கப்படும் நவீன பன்னோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

திருவிதாங்கூா் தேவஸ்வம் ஒதுக்கிய 10,700 சதுர அடி நிலத்தில், மாநில அரசின் ரூ.6.12 கோடி நிதியில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. மூன்று மாடி கட்டடத்தில் நவீன மருத்துவம் மற்றும் ஆயுஷ் ஆகிய 2 மருத்துவ சிகிச்சை வசதிகளும் இங்கு இடம்பெறும்.

நவம்பா் தொடங்கி ஜனவரி வரையிலான சபரிமலை வருடாந்திர யாத்திரையின்போது பம்பை வழியில் மலையேறும் பக்தா்கள் நிலக்கல் பகுதியை முதலில் அடைவா். நிலக்கல்லில் இருந்து பொதுப் போக்குவரத்து (பேருந்து) மூலம் மட்டுமே சபரிமலையின் அடிவாரமான பம்பை பகுதிக்கு பக்தா்கள் செல்ல முடியும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT