நமது நிருபர்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை (நவ. 20) தீர்ப்பளிக்கவுள்ளது.
இந்த அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் வரும் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நவம்பர் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவரது பணியின் கடைசி நாளாகும். அதற்கு ஒரு தினம் முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த மசோதா காலக்கெடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்றும், அவர் தாமதப்படுத்திய மசோதாக்கள் முன்தேதியிட்டு நிறைவேறியதாகக் கருதப்படும் என்றும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டது.
மேலும், அந்தத் தீர்ப்பில் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்தது.
இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு கடிதம் அனுப்பினார். அதை வழக்காக விசாரணைக்கு அனுமதித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் 19 தொடங்கி செப்டம்பர் 11-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு விசாரணை நடத்தியது.
மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்திவைப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை மத்திய, மாநில அரசுகளிடம் அரசியல் சாசன அமர்வு எழுப்பியது.
அதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.