குஜராத்தில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவல் நகரில் திங்கள்கிழமை அதிகாலை மூன்று மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் கோஸ்வாமி கூறுகையில், கர்வாவாட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டடத்தில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
பலியானவர்களில் ஒருவர் இருசக்கரவாகனத்தில் அந்தப் பகுதியைக் கடந்து சென்றார். அவரும் இடிபாடுகளுக்குள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரில் ஒருவர் பெண் மற்றும் அவரது மகள் அடங்குவர்.
தகவல் அறிந்த பிறகு தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழுக்கள் மீட்புப் பணியைத் தொடங்கின.
இது அதிகாலை 5 மணி வரை நீடித்தது. பலியானவர்கள் தினேஷ் ஜங்கி (34), தேவ்கிபென் சுயானி (65) மற்றும் அவரது மகள் ஜஷோதா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுயானியின் கணவரும் மற்றொரு பெண்ணும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.
இந்த கட்டடம் சுமார் 80 ஆண்டுகள் பழமையானது என்றும் நீண்ட காலமாக பாழடைந்த நிலையில் இருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.