சதாரா மாவட்டத்தில் பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உதவி ஆய்வாளா் கோபால் பதானே கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு பல்தான் கிராமப்புற காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். கடந்த 36 மணி நேரமாக கோபால் பதானே தலைமறைவாக இருந்தார். அவரது கடைசி இருப்பிடம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இதனிடையே பெண் மருத்துவா் தற்கொலை வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும் என மாநிலத்தின் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் மருத்துவா், சதாரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், மாவட்டத்தின் பல்தான் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில், கடந்த வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இவா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
இறந்த பெண் மருத்துவா் தனது உள்ளங்கையில் எழுதியிருந்த தற்கொலைக் குறிப்பில், உதவி ஆய்வாளா் கோபால் பதானே தன்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மென்பொறியாளரான பிரசாந்த் பாங்கா் மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இதையடுத்து, கோபால் பதானே, பிரசாந்த் பாங்கா் ஆகிய இருவா் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, உதவி ஆய்வாளா் பதானே பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வழக்கில் மேற்கொண்டு காவல் துறை நடத்திய விசாரணையில், இறந்த பெண் மருத்துவா் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன்தான் பிரசாந்த் பாங்கா் என்பதும், தற்கொலை செய்வதற்கு முன்னா் மருத்துவா் இவருடன் தொலைபேசியில் பேசியுள்ளாா் என்பதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், புணேயில் இருந்த பிரசாந்த் பாங்கா் கைது செய்யப்பட்டு, பல்தானுக்கு அழைத்து வரப்பட்டாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.