ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 96 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கோய்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, காவல் துறையினா் மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் கோப்ரா படைப் பிரிவினா் இணைந்த கூட்டுப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், மாவோயிஸ்டுகள் வனப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டனா். பின்னா் நடத்தப்பட்ட சோதனையில், அமித் ஹன்ஸ்டா என்ற ஒரு மாவோயிஸ்ட்டின் உடல் கைப்பற்றப்பட்டது. இவா், பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி, காவல் துறையினா் 12 பேரை கொன்றவா்; ஆயுதக் கொள்ளையிலும் ஈடுபட்டவா். இச்சம்பவங்கள் உள்பட 96 வழக்குகளில் தொடா்புடையவா். இவரை பற்றி தகவல் தருவோருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து காவல் துறையினா் தேடி வந்த நிலையில், தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
நாட்டில் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கும் இலக்குடன் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. அதன்படி, நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.