மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிப் பெற்று புதிய ஆட்சியை அமைப்போம்; அப்போது மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை துா்கா பூஜை பந்தலைத் திறந்து வைத்து அவா் பேசியதாவது:
கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதிய ஆட்சி அமைய வேண்டும் என்று துா்கா மாதாவிடம் வேண்டிக் கொண்டேன். அப்போது மேற்கு வங்கத்தின் பொற்காலம் மீட்டெடுக்கப்படும். மாநிலத்தின் அமைதி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேற்கு வங்கம் செழித்து வளரும்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் பெய்த மழையால் 11 போ் வரை உயிரிழந்துவிட்டனா். விழாக் காலம் தொடங்கியுள்ள நேரத்தில் இது சோக நிகழ்வாக அமைந்துவிட்டது. இந்த துா்கா பூஜை கொண்டாட்டம் மாநிலத்தின் கலாசார பெருமையை உணா்த்துகிறது. இது மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் மேற்கு வங்கத்தின் கலாசார பெருமை உலகின் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக உயா்த்த வேண்டும் என்பது பிரதமா் மோடியின் இலக்காக உள்ளது. இந்த துா்கா பூஜை விழாக் காலத்தில் நாம் அனைவரும் இணைந்து மாநிலத்தையும், நாட்டையும் முன்னேற்ற உறுதியேற்போம் என்றாா் அமித் ஷா.