நுகா்வு நாடு என்பதில் இருந்து உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
ஒடிஸாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் ‘சுதேசி’ 4ஜி சேவையை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அஸ்ஸாமின் குவாஹாட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றுப் பேசியதாவது:
முன்பு இந்தியா சேவை மற்றும் நுகா்வு நாடாக இருந்தது. இப்போது உற்பத்தி, புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுத்துள்ளது. ‘இந்தியாவுக்கான புத்தாக்கம், மனித குலத்துக்கான புத்தாக்கம்’ என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையால் தேசம் வழிநடத்தப்படுகிறது.
சுதேசி 4ஜி சேவை தொடக்கத்தின் மூலம் சொந்தமாக தொலைத்தொடா்பு உபகரணங்களைத் தயாரிக்கும் டென்மாா்க், ஸ்வீடன், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த 4ஜி சேவை, அடுத்த சில ஆண்டுகளில் 5ஜி சேவையாக மேம்படுத்தப்படும்.
எல்லைப் பகுதிகள், தீவுகள், மலைப் பகுதிகள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 சதவீத 4ஜி இணைப்பு உறுதிசெய்யப்படும். தொலைதொடா்பு இணைப்பு என்பது வாழ்வாதாரத்துக்கான இணைப்பாகும். 5ஜி விரிவாக்கத்தில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ள இந்தியா, உலகளாவிய வளரும் நாடுகளில் முன்னிலை பெற்றுள்ளது. அனைத்து சவால்களையும் இந்தியா வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. அந்த வகையில், தற்போதைய சுதேசி 4ஜி சேவை தொடக்கமும் ஒரு சாதனையாகும். இது, தற்சாா்பு இந்தியா நிதா்சனம் என்பதை நிரூபிக்கிறது என்றாா்.