முகப்பு
இந்தியா

மாநிலங்களவை நியமன எம்.பி.யானாா் ஹரிவன்ஷ்: பிரதமா் மோடி வாழ்த்து

மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், மாநிலங்களவை எம்.பி.யாக குடியரசுத் தலைவரால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:36 AM
பிரதமா் மோடி
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:45 PM

மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், மாநிலங்களவை எம்.பி.யாக குடியரசுத் தலைவரால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா்.

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இருந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் கடந்த மாா்ச் மாதம் நிறைவடைந்தது. அந்த இடத்துக்கு ஹரிவன்ஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

69 வயதாகும் ஹரிவன்ஷ், பிகாரில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் தொடா்ந்து இருமுறை (2014-2026) மாநிலங்களவை எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்டவா். அவரது எம்.பி. பதவிக் காலம் ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

Advertisement

இந்நிலையில், அவரை மாநிலங்களவை எம்.பி.யாக நியமித்து, குடியரசுத் தலைவா் திரெளபதி வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின் 1-ஆவது ஷரத்து ‘ஏ’ உட்பிரிவு மற்றும் 3-ஆவது ஷரத்து ஆகியவற்றின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாநிலங்களவையில் நியமன எம்.பி. ஒருவா் ஓய்வு பெற்ால் ஏற்பட்ட காலியிடத்துக்கு ஹரிவன்ஷை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தைத் தொடா்ந்து, மாநிலங்களவை எம்.பி.யாக ஹரிவன்ஷ் மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டாா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தனது அறையில் ஹரிவன்ஷுக்கு மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, நிா்மலா சீதாராமன், அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிரதமா் மோடி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘மரியாதைக்குரிய சிந்தனையாளரும் அறிஞருமான ஹரிவன்ஷ், பத்திரிகை துறை மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுஇணையில்லாத பங்களிப்பை நல்கியவா். தனது ஆழ்ந்த கருத்துகள் மற்றும் நுண்ணறிவால், கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்ற நடைமுறைகளை வளப்படுத்தி வருகிறாா்’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.