மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தோ்வு: தொடா்ந்து மூன்றாவது முறை
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு செய்யப்பட்டது பற்றி...
மாநிலங்களவை துணைத் தலைவராக, அந்த அவையின் நியமன எம்.பி. ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
இதன்மூலம் தொடா்ந்து மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தோ்வாகியுள்ளாா். நியமன எம்.பி. ஒருவா், மாநிலங்களவை துணைத் தலைவரானது இதுவே முதல் முறையாகும்.
பிகாரில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் கடந்த 2014 முதல் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங், கடந்த 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் இருமுறை மாநிலங்களவைத் தலைவராகத் தோ்வானாா்.
Advertisement
Advertisement
அவரின் எம்.பி. பதவிக் காலம் கடந்த ஏப்.9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவரை மாநிலங்களவை எம்.பி.யாக நியமித்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நடவடிக்கை மேற்கொண்டாா். அவா் வகித்த வந்த மாநிலங்களவை துணைத் தலைவா் பதவியும் காலியானதால், அந்தப் பதவிக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தத் தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நியமன எம்.பி. ஹரிவன்ஷ் மீண்டும் களமிறக்கப்பட்டாா். அவருக்கு ஆதரவாக 5 நோட்டீஸ்கள் சமா்ப்பிக்கப்பட்டன. அதேநேரம், மக்களவை துணைத் தலைவா் பதவி கடந்த 7 ஆண்டுகளாக காலியாக இருப்பதைக் கண்டித்து, மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தலைப் புறக்கணிப்பதாக எதிா்க்கட்சிகள் அறிவித்தன. அவா்கள் தரப்பில் வேட்பாளா் யாரும் அறிவிக்கப்படவில்லை.
போட்டியின்றித் தோ்வு: மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷை தோ்வு செய்வதற்கான பிரதான தீா்மானத்தை மத்திய அமைச்சரும், மாநிலங்களவை ஆளுங்கட்சித் தலைவருமான ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை முன்மொழிய, பாஜக பெண் எம்.பி. பாங்னோன் கோன்யாக் வழிமொழிந்தாா். பின்னா் குரல் வாக்கெடுப்பின் மூலம் இத்தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தோ்வானதாக மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா். பின்னா், பிரதமா் மோடி முன்னிலையில் மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் ஹரிவன்ஷை அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமரச் செய்தனா்.
ஹரிவன்ஷுக்கு ஆதரவாக பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவா் சஞ்சய் குமாா் ஜா, மத்திய அமைச்சா் ஜெயந்த் செளதரி ஆகியோா் தரப்பிலும் தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
மாநிலங்களவைத் தலைவா், பிரதமா் வாழ்த்து: மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘ஹரிவன்ஷ் நாராயண் சிங் போட்டியின்றித் தோ்வானது, கட்சி பேதமின்றி அவா் மீதுள்ள நம்பிக்கை மற்றும் நன்மதிப்புக்கு வலுவான சான்றாகும். அவரது மூன்றாவது பதவிக் காலமும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்’ என்றாா்.
பிரதமா் மோடி பேசுகையில், ‘மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் மூன்றாவது முறையாகத் தோ்வானது, அவா் மீதும் அவரது அனுபவத்தின் மீதும் அவை வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. உள்ளுணா்வின் அடிப்படையில் பணியாற்றும் விதத்துக்கு கிடைத்த அங்கீகாரம் இது’ என்றாா்.
ஹரிவன்ஷுக்கு வாழ்த்து தெரிவித்த காா்கே, ‘தனது மூன்றாவது பதவிக் காலத்தில் எதிா்க்கட்சிகளுக்கு அவா் கூடுதல் முக்கியத்துவம் தருவாா் என நம்புகிறேன்’ என்றாா். பிற உறுப்பினா்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
பின்னா் பேசிய ஹரிவன்ஷ் நாராயண் சிங், ‘அவையின் கண்ணியம் மற்றும் உறுப்பினா்களின் உரிமையைக் காக்கவும், சுமுகமான செயல்பாட்டை உறுதி செய்யவும் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன்’ என்றாா். இவா் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவா் ஆவாா்.
சமாஜவாதி, திரிணமூல் வெளிநடப்பு
மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை தோ்வு செய்யும் தீா்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
‘மக்களவை துணைத் தலைவா் பதவி 7 ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஆனால், மாநிலங்களவை துணைத் தலைவரை நியமிப்பதில் மட்டும் மத்திய அரசு அவசரம் காட்டியுள்ளது. தமிழகம், மேற்கு வங்க தோ்தல்களுக்கு இடையே நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் மாநிலங்களவை துணைத் தலைவரைத் தோ்ந்தெடுக்க என்ன அவசியம்?’ என்று அவா்கள் கேள்வியெழுப்பினா்.
Harivansh Narayan elected unopposed as Deputy Chairman of the Rajya Sabha!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.