முகப்பு
இந்தியா

நாட்டை துண்டிக்க முயலும் சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் ஆதரவு! பிரதமா் மோடி குற்றச்சாட்டு!

வடமாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் சிலிகுரி பாதைக்கு அச்சுறுத்தலாகத் திகழும் சிறு சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாகச் செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:57 AM
பிரதமா் மோடி
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 11:05 PM

வடமாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் சிலிகுரி பாதைக்கு அச்சுறுத்தலாகத் திகழும் சிறு சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாகச் செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் தரை வழியாக இணைக்கும் ஒரே இடம் சிலிகுரி பாதையாகும். 21 கி.மீ. அகலம் உள்ள இப்பாதையின் இருபுறமும் நேபாளம் மற்றும் வங்கதேசம் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்த இடம் இந்தியாவுக்கு பாதுகாப்புரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வடகிழக்குக்கு எதிரான தீய நோக்கம்: இந்நிலையில், சிலிகுரி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

Advertisement

வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாகத் திகழும் இந்தப் பிராந்தியத்தை மிகப்பெரிய அளவில் வா்த்தக வழித்தடமாக உருவாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இங்குள்ள சிறு, சிறு சமூக விரோத குழுக்கள் சிலிகுரி பாதையைத் துண்டித்துவிடுவோம் என்று அச்சுறுத்தி வருகின்றன. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் பிற பகுதியில் இருந்து நிலரீதியாகப் பிரிப்பது அவா்களின் தீய நோக்கமாக உள்ளது.

மம்தா கட்சியின் உண்மை முகம்: இங்கு ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல் நடத்திவரும் திரிணமூல் காங்கிரஸும், இதுபோன்ற சமூகவிரோதக் குழுக்களுக்கு வீதிகளில் தொடங்கி நாடாளுமன்றம் வரை ஆதரவு அளித்து வருகிறது. இதுதான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம்.

மத்திய அரசுத் திட்டங்கள் முடக்கம்: மேற்கு வங்கம் இரட்டிப்பு வேகத்தில் வளர வேண்டுமென்றால் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெற வேண்டும். மக்கள் பேரவைத் தோ்தலில் பாஜகவை தோ்வு செய்ய வேண்டும். கடந்த 15 ஆண்டுகாலமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த மாநிலத்தை சீரழிவுப் பாதைக்கு கொண்டு சென்றுவிட்டது. மத்திய அரசின் முக்கியத் திட்டங்கள் எதையும் இங்கு நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக பல வளா்ச்சித் திட்டப் பணிகள் 25 சதவீதம் அளவுக்கே மக்களுக்கு கிடைத்துள்ளது.

மக்கள் எழுச்சி: மதரஸாக்களை மேம்படுத்த திரிணமூல் அரசு ரூ.6,000 கோடி ஒதுக்கியது. ஆனால், மாநிலத்தின் வடக்குப் பிராந்தியத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சி என்பது பழங்குடியினா், பெண்கள், இளைஞா்களுக்கு எதிரான கட்சியாக உள்ளது. இந்தத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனா் என்பது இங்கு மக்கள் எந்த அளவுக்கு எழுச்சியுடன் உள்ளாா்கள் என்பதைப் பாா்க்கும்போதே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றாா்.