தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 59-ஆக உயரும்: அமித் ஷா
தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது, தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்?என்பது குறித்து மக்களவையில் அமித் ஷா விளக்கம்..
தொகுதிகள் மறுசீரமைப்பு மற்றும் மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-இல் இருந்து 815-ஆக அதிகரிப்பதால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் என்று பரப்பப்படும் கருத்து முழுவதும் தவறானது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மேலும், ‘மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்படுவதன் மூலம் தென் மாநிலங்களில் இடம்பெற்றுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய 129-லிருந்து 195-ஆக அதிகரிக்கும். தமிழகத்தில் 39-லிருந்து 59-ஆக தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு அமித் ஷா பேசியதாவது: தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று பரப்பப்படும் கருத்து முற்றிலும் தவறானது.
Advertisement
Advertisement
உண்மையில், தொகுதிகளின் எண்ணிக்கையும் உயரும்; அதிகாரமும் வளா்ச்சி பெறும். 5 தென் மாநிலங்களில் தற்போது உள்ள 129 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 195-ஆக உயரும். இந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் என்பது தற்போதைய 23.76 சதவீதத்திலிருந்து 23.87 சதவீதமாக அதிகரிக்கும்.
குறிப்பாக, தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆகவும், கா்நாடகத்தில் 28-லிருந்து 42-ஆகவும், ஆந்திரத்தில் 25-லிருந்து 38-ஆகவும், தெலங்கானாவில் 17-லிருந்து 26-ஆகவும், கேரளத்தில் 20-லிருந்து 30-ஆகவும் உயரும்.
தொகுதிகள் மறுசீரமைப்பின்போது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிா்க்கட்சிகள் கூறுவது தவறான விஷயம். நடைமுறையில் உள்ள சட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்ளவில்லை.
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த முந்தைய சட்டத்தைப் போன்றதுதான் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவும். எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றாா் அவா்.