முகப்பு
இந்தியா

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளப் பதிவு பற்றி...

Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:16 PM
நிர்மலா சீதாராமன் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:42 PM

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் நிறைவேற்றம் தோல்வியடைந்ததால் தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் நிறைவேற்றம் தோல்வியடைந்தது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) மாலை நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

Advertisement

அதில், 298 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா நிறைவேற்றம் மக்களவையில் தோல்வி அடைந்தது.

இதுதொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு தனது அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு மற்றும் கூடுதலான 20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களை இழந்துவிட்டது.

பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட 50% கூடுதல் இடங்கள் என்ற பொன்னான வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு கைப்பாவை போல இருந்து, அந்த வாய்ப்பின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், அதை கண்மூடித்தனமாக எதிர்த்தார்.

முதல்வரே. நீங்கள் எதைக் கொண்டாடி வருகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய சேதத்தையா அல்லது பெண்கள் மேம்பாட்டிற்கான வாய்ப்பை பாழாக்கியதையா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பதிவை வரவேற்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஸ்டாலின் தலைமையிலான வெறுப்பு நிறைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவ வாய்ப்பைத் தமிழகம் இழக்கச் செய்துள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

கண்மூடித்தனமான வெறுப்பு, மாநிலத்திற்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தொகுதிப்பங்கீட்டையும் பெண்களுக்குக் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. குறுகிய பார்வை கொண்ட, பிடிவாதமான, தொலைநோக்கற்ற, பெண்களுக்கு எதிரான திமுகவினால், தமிழகம் ஆதாயமடைவதற்குப் பதிலாக இழப்புகளைச் சந்திக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்த இருதரப்புக்கும் பலனளிக்கும் திட்டத்தில் நீங்கள் பங்கெடுக்க மறுத்து, தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Tamil Nadu will face losses: Nirmala Sitharaman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.