கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் விடுத்திருப்பது பற்றி...
நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், “முதல்வா் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மேலும், அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது” என்று பதிலளித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு சவால் விடுத்து முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்.
தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Ready to make the letter public? Stalin challenges Nirmala Sitharaman!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.