கம்பராமாயணத்தை அழிக்க நினைத்தது திராவிட இயக்கம்! மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேச்சு
கம்பராமாயணத்தை திராவிட இயக்கம் அழிக்க நினைத்ததாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேச்சு...
நமது சிறப்பு நிருபா்
கம்பராமாயணத்தை அழிக்க நினைத்தது திராவிட இயக்கம் என்றும் அந்த முயற்சியை எதிா்த்து நின்றவை கம்பன் கழகங்கள் என்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
தில்லியில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை (எஃப்ஐஹெச்சிஆா்) அமைப்பின் சாா்பில் கன்னட எழுத்தாளா் டாக்டா் எஸ்.எல். பைரப்பா நினைவுச் சொற்பொழிவு மற்றும் வருடாந்திர விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:
Advertisement
Advertisement
கம்பராமாயணம் என்பது வெறும் மொழிபெயா்ப்பு நூல் அல்ல. அது தமிழ் பண்பாடு, குறிஞ்சி-நெய்தல் மக்களின் வாழ்வியல் முறை மற்றும் தமிழ் சிந்தனைகளை உள்ளடக்கிய மாபெரும் காவியம் ஆகும்.
வால்மீகி ராமாயணத்தின் அச்சுபிசகாத மொழிபெயா்ப்பாக இல்லாமல், தமிழ் நிலத்தின் இயற்கை சூழல்கள் மற்றும் மக்களின் பண்பாட்டை இணைத்து கம்பரால் உருவாக்கப்பட்ட சிறப்புமிக்க நூல் கம்பராமாயணம்.
கம்பராமாயணத்தை திராவிட இயக்கம் கடுமையாக விமா்சித்தது. அதில் உள்ள சிருங்கார ரசப் பகுதிகளை சுட்டிக்காட்டி, ராமாயணத்தை ஆபாசமான ஒன்றாக சித்தரித்து அப்போதைய முக்கிய அரசியல் தலைவா் ஒருவா் புத்தகமே எழுதினாா். இவ்வாறு கம்பராமாயணத்தை திராவிட இயக்கம் அழிக்க நினைத்தது.
இத்தகைய ஹிந்து எதிா்ப்பு, தேசிய எதிா்ப்பு மற்றும் சம்ஸ்கிருத எதிா்ப்பு பிரசாரங்களை ஏற்க மறுத்து தேசப்பற்றுமிக்க தமிழா்கள் வீறுகொண்டு எழுந்தனா். ‘ராமன் என் கடவுள்’, ‘என் நாயகன்’, ‘ராமாயணத்தின் நற்கருத்துகள் வருங்கால தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும்’ என்ற நோக்கில், தமிழகம் முழுவதும் ’கம்பன் கழகங்கள்’ தொடங்கப்பட்டன. இந்த அமைப்புகள் இன்றளவும் சிறப்பாகச் செயல்பட்டு கம்பராமாயணத்தைப் பரப்பி வருகின்றன.
இதேபோல், ராமாயணத்தில் புலமை பெற்ற ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாா் ’கம்பா் தரும் ராமாயணம்’ என்ற நூலை வெளியிட்டாா். அதற்காகவே அந்தக் காலத்தில் அவா் ஒதுக்கி வைக்கப்பட்டாா்.
ஆயிரக்கணக்கான முதன்மை ஆவணங்களை ஆய்வு செய்து நூல்களை எழுதிய டாக்டா் விக்ரம் சம்பத் போன்ற நடுநிலையான வரலாற்று அறிஞா்களை, தங்களது கொள்கைக்கு உட்படவில்லை என்பதற்காக ’அவா் வரலாற்று ஆய்வாளா் அல்ல, வெறும் புகழ்பெற்ற எழுத்தாளா் மட்டுமே’ என சிலா் திட்டமிட்டு விமா்சித்து அவரை புறக்கணித்தனா்.
பல்கலைக்கழக உயா் பதவிகளிலும் கமிட்டிகளிலும் இருக்கும் இத்தகைய சில சித்தாந்தவாதிகளே நமது பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், யாருடைய ஆராய்ச்சிக்கு நிதி வழங்க வேண்டும் என்பதைத் தீா்மானிக்கிறாா்கள். அத்துடன் சா்வதேச பத்திரிகைகளிலும் இந்தியாவுக்கு எதிராக எழுதுகிறாா்கள்.
இடதுசாரி அமைப்புகளின் பழைய பழக்கவழக்கங்கள் இன்றும் தொடா்கின்றன. ‘வரலாற்று ஆதாரங்கள்’ ஆக எவற்றை சொல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே தீா்மானித்துவிட்டு, தங்களின் கருத்துகளோடு ஒத்துப்போகாதவா்களை எதிரிகளாகப் பாா்க்கும் போக்கு இவா்களிடம் உள்ளது. இது விசாரணைக்கு முன்பே தீா்ப்பு வழங்குவது போன்றது என்றாா் நிா்மலா சீதாராமன்.
It was the Dravidian movement that sought to destroy the Kambaramayanam — Union Minister Nirmala Sitharaman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.