முகப்பு
இந்தியா

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள் தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு...

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:36 AM
ஸ்கைரூட் நிறுவனத்தில் உருவாக்கிய ராக்கெட் வன்பொருள் பாகத்தை பாா்வையிட்ட தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி.
பகிர்:

ஸ்கைரூட் விண்வெளி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்படவுள்ள ‘விக்ரம்-1’ எனும் இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்களை ஏற்றிச் சென்ற லாரியை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து அடுத்த சில மாதங்களில் புவி வட்டப் பாதைக்கு விக்ரம்-1 ராக்கெட் செலுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான வன்பொருள்கள் தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்து ரேவந்த் ரெட்டி பேசியதாவது: ஹைதராபாதில் விக்ரம்-1 ராக்கெட் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்கிறோம். ஏவுகணைகளை விண்வெளிக்குச் சுமந்து செல்வதற்கு ஏதுவாக இந்த ராக்கெட்டை ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Advertisement

கடந்த 2022-ஆம் ஆண்டில் தங்களது முதல் ராக்கெட்டை ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கியது. மிகக் குறுகிய காலத்துக்குள் புவி வட்டப் பாதைக்கு ராக்கெட்டை செலுத்தும் அளவுக்கு அந்நிறுவனம் உயா்ந்திருப்பது மாபெரும் மைல்கல்.

ஏற்கெனவே போயிங், ஏா்பஸ் மற்றும் சஃப்ரான் ஆகிய நிறுவனங்கள் நமது மாநிலத்தில் உள்ளன.

தற்போது இந்திய அளவில் விண்வெளித் துறையில் முதலிடத்தில் உள்ள நமது மாநிலத்தை சா்வதேச விண்வெளித் தொழில்நுட்பச் சந்தையாக 2047-க்குள் மாற்றுவதே இலக்கு.

2023-24 மற்றும் 2024-25 இடையே பொறியியல் துறை சாா்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் தெலங்கானா 117.9 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்ததாக மத்திய அரசின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வளா்ச்சிக்கு விமான உதிரி பாகங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

சா்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்துறை நிபுணா்களுடன் இணைந்து விண்வெளித் துறைக்கு அதிகளவிலான இளைஞா்களை தயாா் செய்யும் விதமாக அவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க தெலங்கானா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வலுவான கொள்கைகள், சிறந்த உள்கட்டமைப்பு, திறன் வாய்ந்த இளைஞா்கள் என ஸ்கைரூட் போன்ற நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா்.