முகப்பு
இந்தியா

ஹிட்லரிடம் உத்வேகம் பெற்று திட்டத்திற்குப் பெயர்: ரேவந்த் ரெட்டி மீது எழும் விமர்சனங்கள்!

தெலங்கானா அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்துக்கு ஹைட்ரா என்று பெயர் வைத்தது ஹிட்லரின் அமைப்பால் உத்வேகம் பெற்று வைக்கப்பட்டதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Updated On : 7 ஜூன் 2026, 10:36 pm IST
தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்
பகிர்:

தெலங்கானா அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்துக்கு ஹைட்ரா என்று பெயர் வைத்தது ஹிட்லரின் அமைப்பால் உத்வேகம் பெற்று வைக்கப்பட்டதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளைக் கவனித்து, அதனை அகற்ற ‘ஹைட்ரா’ (HYDRAA) என்ற திட்டத்தை தொடங்கியதாக அவர் பேசியிருந்தார்.

அதில், "ஏரிகள் மற்றும் வடிகால்களை ஏழைகள் ஆக்கிரமிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பணக்காரர்களும் தங்கள் பண்ணை வீடுகளுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்து, கழிவுநீர் இணைப்புகளை நீர்நிலைகளில் கலக்கவிடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து கவனித்தப் பின்னரே, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஹைட்ரா என்ற திட்டத்தின் மூலம் சிறப்புக் குழுவை நிறுவ முடிவுசெய்தேன்.

Advertisement

Advertisement

'ஹைட்ரா' என்பது ஹிட்லரின் விருப்பத்திற்குரிய சொல். 'ஹைட்ரா' என்று அழைக்கப்பட்ட அவரது முக்கியக் குழு யாரையும் கொல்லக்கூடிய வலிமை பெற்றிருந்தது. அதனால், ஹிட்லரிடமிருந்து உத்வேகம் பெற்று அந்தப் பெயரை இந்தத் திட்டத்திற்கு வைத்துள்ளேன். மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இந்தக் குழுவுக்கு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று பேசினார்.

தெலங்கானா அரசு 2024 ஜூலையில், 'ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு முகமை’ (ஹைட்ரா) என்ற அமைப்பைத் தொடங்கியது. ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க இது தொடங்கப்பட்டது. இதன்மூலம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றது.

மார்வெல் காமிக்ஸ் தொடரில் வரும் கற்பனை அமைப்பின் பெயரே ‘ஹைட்ரா’. காமிக்ஸ் தொடரில் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களின் அறிவியல் பிரிவாக ஹைட்ரா அமைப்பு செயல்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால், அது வரலாற்று ரீதியான உண்மையல்ல எனக் கூறப்படுகிறது.

ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி எக்ஸ் தளத்தில், “காங்கிரஸ் கட்சியின், ஆபத்தான ஹிட்லர் மற்றும் அவசரநிலை கால மனநிலை மீண்டும் வெளிப்படையாகத் தெரிகிறது. ரேவந்த் ரெட்டி ஹைட்ரா அமைப்பை உருவாக்க ஹிட்லர் உத்வேகம் அளித்ததாக வெளிப்படையாகக் கூறுகிறார். அதேபோல, ஹைதராபாத்தில் மேற்கொள்ளப்படும் இடிப்பு நடவடிக்கைகளை ஈரான் மற்றும் இஸ்ரேல் போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகிறார். அவரது தலைவர் ராகுல் காந்தியின் பாணியை இது எதிரொலிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "அவசரநிலை காலம் முதல் காங்கிரஸ் எப்போதும் மக்களின் குரலை ஒடுக்கி வந்துள்ளது” எனக் குற்றம் சாட்டிய அவர் ரேவந்த் ரெட்டி இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார்.

பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ், ”முதல்வரின் கருத்துகள் அவரது சர்வாதிகார, பாசிச மனநிலையை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இதுபோன்ற கருத்துகளை காங்கிரஸ் அங்கீகரிக்கிறதா?” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினர் பலரும் ரேவந்த் ரெட்டியின் பேச்சை விமர்சித்து வருகின்றனர்.

summary

Criticism against Revanth Reddy for naming a scheme after drawing inspiration from Hitler!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.