ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்! - கவிதாவின் பதிவும் பிஆர்எஸ்ஸின் பதிலும்
தெலங்கானாவில் கவிதாவின் புதிய கட்சி பற்றி பிஆர்எஸ் பதிவு...
சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில் அதுபற்றி தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கருத்து பதிவிட்டுள்ளது.
தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தெலங்கானா ராஷ்டிர சேனா' (டிஆர்எஸ்) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இன்று ஹைதராபாத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்த அவர், சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு மாற்றாக தனது கட்சி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Advertisement
இதன்பின்னர் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில்,
"இந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்: தெலங்கானா ராஷ்டிர சேனா
எது நடந்தாலும் நாங்கள் பின்வாங்கமாட்டோம்; தெலங்கானா மக்கள் தங்கள் குரலை ஒலிக்க இதுவே சரியான தருணம்.
எங்கள் லட்சியங்கள் மங்கிப்போக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; எங்கள் பாதையில் குறுக்கிடத் துணிந்தால், நீங்கள் சாம்பலாய் மாறிப்போவீர்கள்.
உங்கள் காலம் முடிந்தது; எங்கள் காலம் இப்போது!" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பிஆர்எஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்' என்ற வாசகத்துடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
சந்திரசேகர் ராவின் கட்சியின் பெயர் முதலில் 'தெலங்கானா ராஷ்டிர சமிதி'(டிஆர்எஸ்) என்று இருந்தது. பின்னர் இந்தியா முழுவதும் கட்சியை கொண்டுசெல்லும்பொருட்டு அவர் தனது கட்சியை 'பாரத ராஷ்டிர சமிதி'(பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றினார்.
தற்போது கவிதா, தனது தந்தை தொடங்கிய கட்சியின் பெயரிலேயே புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
தந்தையின் 'தெலங்கானா ராஷ்டிர சமிதி' (டிஆர்எஸ்) க்குப் பதிலாக 'தெலங்கானா ராஷ்டிர சேனா' (டிஆர்எஸ்) என்று பெயரை அறிவித்துள்ளார்.