மாநிலங்களவை: மூன்றில் இரு பங்கு பலம்பெற தே.ஜ. கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள் தேவை?
மாநிலங்களவையில் கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி...
ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தது அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல், ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், ராஜிந்தர் குப்தா மற்றும் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகியோர் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்பிக்கள் இருக்கும் நிலையில், மூன்றில் இரு பங்கு எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சியால் தகுதிநீக்க நடவடிக்கை கோர முடியாது என்று கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், மாநிலங்களவை தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், இனி அவர்கள் 7 பேரும் மாநிலங்களவையில் பாஜக எம்பிக்களாகவே செயல்படுவர்.
இதனிடையே, மாநிலங்களவையில் கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மாநிலங்களவைச் செயலகம் புதுப்பித்துள்ளது.
அதன்படி, மாநிலங்களவையில் 106 ஆக இருந்த பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. நியமன எம்பிக்கள் எண்ணிக்கையையும் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 141 இல் இருந்து 148 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், காங்கிரஸ் 29, திரிணமூல் காங்கிரஸ் 13, திமுக 8, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 7, பிஜு ஜனதா தளம் 6, அதிமுக 5, ஐக்கிய ஜனதா தளம் 4, சமாஜவாதி 4, தேசியவாத காங்கிரஸ் 4 உறுப்பினர்களை கொண்டுள்ளன.
இந்தாண்டு இறுதியில் 30 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்த இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், பாஜகவுக்கு குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.
மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 163 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், இந்தாண்டு இறுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறைந்தது 153 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.