மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை
மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக பாஜகவை மக்கள் பழி வாங்குவர் என்று அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை
மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக பாஜகவை மக்கள் பழி வாங்குவர் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், "இந்தத் தேர்தலில் போட்டியிடும் மமதா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகள். இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடும் மேற்கு வங்க மக்களுக்கும் எனது வாழ்த்துகள்.
கடந்த 2 நாள்களில் மாநிலத்தில் நடந்தவற்றையெல்லாம் பார்க்கும்போது, மாநிலத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக மக்கள் பழி வாங்குவார்கள் என்று தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.
Advertisement
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டியில் நிலவிவரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பேசியுள்ளார்.
முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கடும் முயற்சிகளை செய்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கான தேர்தல் புதன்கிழமையில் (ஏப். 29) நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, மாநிலத்தின் சாதனை அளவாக முதற்கட்டத் தேர்தலில் 93.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதற்கட்டத் தேர்தலைவிட 2ஆம் கட்டத் தேர்தல்தான் மிக முக்கியம், ஏனெனில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகள் பலவும் மமதா பானர்ஜியின் கோட்டையாக விளங்குபவை.