முகப்பு
இந்தியா

பட்ஜெட் 2026: “சாமானிய மக்களுக்கென எந்தவொரு அறிவிப்புமில்லை..!” -எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகளின் விமர்சனப் பார்வைக்கு உள்ளான பட்ஜெட் 2026..!

Updated On : 1 பிப்ரவரி 2026, 9:39 pm IST
- ANI
பகிர்:

மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சாமானிய மக்களுக்கென எந்தவொரு அறிவிப்புமில்லை எனவும், அடிப்படைப் பிரச்னைகளான கல்வி, மகக்ள் நலன் மற்றும் சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இந்தப் பட்ஜெட் புறக்கணித்துவிட்டது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இன்று(பிப். 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சாதாரண மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்ற விமர்சனத்தை முன்வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகள்:

சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், மக்கள்தொகையில் முதல் நிலையிலுள்ள 5 சதவீதத்தினருக்கானதாக இந்தப் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும், மீதமுள்ள 95 சதவீத மக்களின் தனிநபர் வருமானம் குறித்து அரசு விவாதிக்கத் தயாரா? என்றும் சவால் விடுத்தார்.

Advertisement

Advertisement

அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் பட்ஜெட் பற்றி பேசும்போது, பெண்களுக்கும் இளையோருக்கும் இந்தப் பட்ஜெட்டில் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், வேளாண் துறைகளுக்கென பட்ஜெட்டில் எதுவுமேயில்லை என்றார்.

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி எம். பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மனோஜ் ஜா முன்வைத்த விமர்சனத்தில், ‘நாட்டில் வருமான சமத்துவமின்னை மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும், ஆனால், அந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள இந்தப் பட்ஜெட் தவறிவிட்டதாகக்’ குறிப்பிட்டார்.

அம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குறிப்பிடும்போது, ‘ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை வழங்குவதாக இந்த அரசு அறிவித்திருந்தது. சுமார் 12 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்கிறது. அப்படியிருக்கும்போது, 24 கோடி வேலைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? வேலைவாய்ப்பு குறித்து பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் அரசால் குறிப்பிடப்படவில்லை’ என்றார்.

மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கேரளம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற முக்கிய குற்றச்சாட்டை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சுமத்தியுள்ளார். பட்ஜெட்டில் கேரளம் முற்றிலும் விடுபட்டுவிட்டதாக காங்கிரஸ் எம்.சி. சசி தரூரும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கடந்த 12 ஆண்டுகளாகவே தெல்ங்கானா புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது பிஆர்எஸ் தலைவர் கே. டி. ஆர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சுமார் 60க்கும் அதிகமான முறை, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தில்லிக்குச் சென்றிருந்தும் ஒரு ரூபாய்கூட பலனின்றி அமைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை, குறிப்பாக மேற்குவங்க மாநிலத்திற்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளாத பட்ஜெட் இது என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், முக்கியமாக, இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து நிதியமைச்சர் பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடவில்லை என்றும், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (பத்தாயிரம் கோடி டாலர்கள்) குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் விமர்சித்தார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் ஏதுமில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கனிமொழி எம்.பி.யும், பட்ஜெட்டில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தியும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Opposition MPs on Sunday alleged that the Union Budget 2026-27 did not have any announcements for the common people

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments