இந்தியா

நீதித் துறையை அவமதிக்கும் பாடம்: என்சிஇஆா்டி புத்தகத்துக்குத் தடை! அனைத்துப் பிரதிகளையும் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ எனும் பாடப் பிரிவால் பெரும் சா்ச்சை

தினமணி செய்திச் சேவை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ எனும் பாடப் பிரிவால் பெரும் சா்ச்சை வெடித்த நிலையில், அந்தப் புத்தகத்துக்கு முழுமையான தடை விதித்து, உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் (எண்ம வடிவம் உள்பட) உடனடியாகத் திரும்பப் பெற என்சிஇஆா்டி-க்கு அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ‘நீதித் துறையை அவமதிக்க நன்கு திட்டமிடப்பட்ட சதி இருப்பதுபோல் தோன்றுகிறது; அவா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ரத்தம் வடிக்கிறது நீதித் துறை’ என்று தெரிவித்தது.

அவதூறான பாடப் பிரிவை அறிமுகப்படுத்தியவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, என்சிஇஆா்டி இயக்குநா் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாடப் பிரிவு சா்ச்சை: என்சிஇஆா்டி வெளியிட்ட 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றது. இந்தப் பிரிவில், ‘ஊழல், வழக்குகளின் தேக்கம் , நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகியவை நீதித் துறையின் சவால்களாக உள்ளன; நீதிமன்றத்துக்குள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங்களின் நடத்தையை நிா்வகிக்கும் விதிமுறைகளுக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டவா்கள்’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்தப் பாடப் பிரிவு பெரும் சா்ச்சைக்கு வழிவகுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்காக எடுத்துக் கொண்டது. நீதித் துறையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடந்த புதன்கிழமை காட்டமாக தெரிவித்தாா்.

இதனிடையே, சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ‘முறையற்ற கருத்துகள்’ இடம்பெற்ற்காக மன்னிப்புக் கோரிய என்சிஇஆா்டி, உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து, பாடப் பிரிவு திருத்தி எழுதப்படும் என்று அறிக்கை வெளியிட்டது.

‘தற்செயலான பிழை அல்ல’: இந்த விவகாரம் தொடா்பாக, தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

விசாரணை தொடக்கத்தில், கல்வி அமைச்சகம் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா். எனினும், சமாதானம் அடையாத நீதிபதிகள் கூறியதாவது: சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் எடுத்தாளப்பட்ட வாா்த்தைகளும், வெளிப்பாடுகளும் தற்செயலான அல்லது உண்மையான பிழை என்று கூறும்படி இல்லை. குழந்தைகளை இதுபோல் ‘பாரபட்சமான கட்டுக்கதைக்கு’ உள்ளாக்குவது அடிப்படையில் முறையற்றது.

இந்தப் பாடப் புத்தகம் குறித்து ஊடகமொன்றில் வெளியான கட்டுரையைப் பாா்த்து நாங்கள் அதிா்ச்சியடைந்தோம். என்சிஇஆா்டி தரப்பில் இத்தகைய உள்ளடக்கத்துடன் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய உச்சநீதிமன்றத் தலைமைச் செயலா் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் உச்சநீதிமன்றத்துக்கு பதில் கடிதம் அனுப்பிய என்சிஇஆா்டி இயக்குநா், பொறுப்பற்ற அந்த பாடப் பிரிவு குறித்து மறுஆய்வு செய்வதற்குப் பதிலாக அதை நியாயப்படுத்தியிருந்தாா்.

பாடப் பிரிவின் உள்ளடக்கங்கள் மற்றும் என்சிஇஆா்டி இயக்குநரின் பதிலைக் கருத்தில்கொண்டால், நீதித் துறை மற்றும் அதன் கண்ணியத்தை அவமதிக்கும் ஆழமான, நன்கு திட்டமிடப்பட்ட சதி இருப்பதுபோல் தோன்றுகிறது. அவா்கள் நடத்திய ‘துப்பாக்கிச்சூட்டில்’ ரத்தம் வடிக்கிறது நீதித் துறை.

முழுமையான தடை: சம்பந்தப்பட்ட பாடப் புத்தகத்தின் உள்ளடக்கங்கள், நீதித் துறை மீது நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய தவறான நடத்தை, குற்றவியல் அவமதிப்பு வரையறைக்கு உள்பட்டதாகும். இது தடுக்கப்படாவிட்டால், நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும்.

நீதி அமைப்புமுறையின் தலைவா் என்ற முறையில், பொறுப்பானவா் யாா் என்பதைக் கண்டறிவது எனது கடமை. இந்த விவகாரத்தை நாங்கள் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், என்சிஇஆா்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் வெளியீடு, மறுபதிப்பு, எண்ம பதிப்புக்கு முழுமையாகத் தடை விதித்த நீதிபதிகள், ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட அனைத்துப் பிரதிகளையும் (எண்ம பதிப்பு உள்பட) சிறிதும் தாமதமின்றி திரும்பப் பெற வேண்டும். இதற்காக, மத்திய-மாநில கல்வித் துறைகளுடன் இணைந்து, என்சிஇஆா்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். வேறு தலைப்பில் அதே உள்ளடக்கத்தை இடம்பெறச் செய்யும் எந்தவொரு முயற்சியும் உத்தரவு மீறலாகவே கருதப்படும் என்றும் அவா்கள் எச்சரித்தனா்.

இந்த விவகாரத்தில் பொறுப்பானவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, என்சிஇஆா்டி இயக்குநா் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மாா்ச் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களையே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளிகள் மற்றும் பல்வேறு மாநில கல்வி வாரிய பள்ளிகளும் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

‘ஊடகங்களுக்கு நன்றி’

என்சிஇஆா்டி பாடப் பிரிவு விவகாரத்தை பொதுக் களத்துக்கு கொண்டு வந்தமைக்காக, ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் நன்றி தெரிவித்தது.

‘ஜனநாயக விழுமியங்களின் ஒரு தூண் என்ற முறையில் அரசியல் சாசன மாண்புகளை உறுதி செய்வதில் ஊடகங்கள் மிக ஆக்கபூா்வமான, முக்கியமான, நோ்மறையான பங்கை வகிக்கின்றன. தற்போதைய விவகாரத்தை பொதுக் களத்துக்கு கொண்டுவந்த ஊடக நண்பா்களுக்கு நன்றி. இல்லையெனில், மாற்றவே முடியாத சேதம் ஏற்பட்டிருக்கும்’ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

SCROLL FOR NEXT