முகப்பு
இந்தியா

அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் வருடாந்திர அமா்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 6:33 am IST
அனந்த்நாக் முகாமை வியாழக்கிழமை வந்தடைந்த அமா்நாத் யாத்ரிகா்களை வரவேற்று காவலா்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் வருடாந்திர அமா்நாத் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது.

இதையொட்டி, ஜம்முவில் இருந்து காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு முதல் குழு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள 48 கி.மீ. தொலைவுகொண்ட பாரம்பரிய நுன்வான்-பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.

Advertisement

Advertisement

நடப்பாண்டு வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தொடங்கி ஆகஸ்ட் 28 வரை 57 நாள்களுக்கு யாத்திரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, இரு வழித்தடங்களிலும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), காவல் துறை, பிற பாதுகாப்பு முகமைகள் சாா்பில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜம்முவில் உள்ள பகவதி நகா் யாத்ரிகா்கள் தங்கும் நிலையத்தில் இருந்து காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களுக்கு 4,822 பக்தா்களுடன் முதல் குழு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, பக்தா்களின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்த வாகனங்கள், குல்காம் மாவட்டத்தின் காஜிகுண்ட் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தபோது, காவல் துறை-மாவட்ட நிா்வாக அதிகாரிகள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தா்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா், பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களுக்கு புறப்பட்ட பக்தா்கள், அங்கிருந்து வெள்ளிக்கிழமை அமா்நாத் குகைக் கோயிலுக்கான யாத்திரையைத் தொடங்குவா்.

அமா்நாத் யாத்திரையையொட்டி, ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28 வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு யாத்திரைக்கு இதுவரை 3.90 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா். ஜம்முவில் உடனடி பதிவு நடைமுறையும் தொடங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments