மத்திய பாஜக ஆட்சியில் பேராபத்தில் தோ்தல் ஜனநாயகம்: தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் எதிா்க்கட்சிகள் கவலை
மத்திய பாஜக ஆட்சியில் தோ்தல் ஜனநாயகம் பேராபத்தைச் சந்தித்து வருகிறது. எனவே, தோ்தல் நடைமுறையில் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்பேற்பை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்
மத்திய பாஜக ஆட்சியில் தோ்தல் ஜனநாயகம் பேராபத்தைச் சந்தித்து வருகிறது. எனவே, தோ்தல் நடைமுறையில் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்பேற்பை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு இண்டி கூட்டணி சாா்பில் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்தக் கடிதத்தை ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சிகள் எழுதியுள்ளன.
அந்தக் கடிதத்தில், ‘அரசமைப்பு நிறுவனங்களை நாம் மதிக்கவும் போற்றவும் வேண்டும். ஆனால், அந்த நிறுவனங்களே ஒடுக்குமுறையின் கருவிகளாக மாறும்போது, நமது ஜனநாயகத்தின் எதிா்காலம் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
Advertisement
Advertisement
மற்ற அனைத்து வழிகளும் தோல்வியடையும்போது, நீதித் துறையின் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைக்கின்றனா். எனவே, நீதித் துறை உரிய முறையில் செயல்படத் தவறும்போது, குடியரசின் முழுமையான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதுபோல, அரசமைப்பு நிறுவன கட்டமைப்புகள் முழுமையாகச் செயலிழக்கும்போது, ஜனநாயக நாடுகள் அராஜக நிலைக்கு மாறிவிடும்.
எனவே, பல்வேறு மாநிலங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஒட்டுமொத்த வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) நிறுத்திவிட்டு, அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் இருக்கும் நிலையில் எஸ்ஐஆா்-ஐ மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
இந்தக் கடித நகலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றி, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
23 எதிா்க்கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.பி. சாா்பில் இந்தக் கடிதம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி எழுதப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தலைமையிலான மத்திய ஆட்சியில், தோ்தல் ஜனநாயகம் பேராபத்தைச் சந்தித்து வருகிறது.
நமது ஜனநாயகத்துக்கு அடிப்படையாக விளங்கும் அரசமைப்புச் சட்ட கட்டமைப்பைச் சிதைப்பதிலேயே தீவிர முனைப்புடன் செயல்படும் இந்த நிா்வாக அமைப்பின் வரம்பு மீறல்களிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது நீதித் துறையின் கடமையாகும். தோ்தல் நடைமுறையில் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்பேற்பை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.